|
ஒரு நாட்டின் மன்னன் ஒருவன் அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்பியதால் போர் என்ற பேச்சிற்கு கூட அவன் ஆட்சிக் காலத்தில் இடம் இல்லாமல் போனது. வீரர்கள் எல்லாம் போர் இல்லாததால் போரடித்துப் போகாமல் இருக்க விவசாயம் செய்து போர் அடித்தார்கள். விளைச்சல் பெருகியதால் நாடு சுபிட்சமாக இருந்தது. எப்போதும் எல்லா நிகழ்வுகளும் ஒரே மாதிரியாக மாறாமல் நடப்பதில்லையே.. அப்படித்தான், அந்த நாட்டின் அமைதிக்கும் ஒரு பங்கம் வந்தது. இந்த நாட்டில் இருக்கும் வீரர்கள் எல்லாம் போர்ப்பயிற்சியே இல்லாதவர்கள். படையெடுத்து வந்தால், வெற்றி நிச்சயம் என்ற தகவல், ஒற்றன் மூலமாக வேற்று நாட்டு அரசனுக்குச் சென்றது. மண் ஆசை கொண்ட அந்த அரசன், கொஞ்சமும் தாமதிக்காமல் தன் படைகளோடு புறப்பட்டான். எதிரி அரசன் படை எடுத்து வருவது, அமைதி நாட்டு மன்னனுக்குத் தெரியவந்தது. அவருக்குப் போர் பிடிக்காதே தவிர, வீரத்திலோ விவேகத்திலோ அவருக்கு இணையானவர் எவருமே கிடையாது. அதனால், என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார் அரசர். போரைத் தவிர்த்தாக வேண்டும் என்பதோடு எந்தப் பக்கத்திலும் உயிர் இழப்பு ஏற்படக்கூடாது. அதேசமயம் இப்போதைய திட்டம், எதிர்காலத்தின் பாதுகாப்புக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். என்ன செய்வது? மன்னரின் சிந்தனைக்கு ஒரு விடை கிடைத்தது. உடனடியாக வீரர்களை அழைத்த அரசர், அந்த யோசனையைச் சொன்னார்.
அன்று மாலை வெளிச்சம் மறைந்து இருள் பரவ ஆரம்பிக்கும் சமயம். கோட்டையின் மதில் மீது வரிசையாக ஏறினார்கள், வீரர்கள். அதுவும் ஒவ்வொரு வீரனும் மிகப் பெரிய பாறை ஒன்றினைத் தன் தோளில் சுமந்தபடி ஏறினான். சுமார் இருபதுபேர் சேர்ந்து மிகவும் சிரமப்பட்டு தூக்கக்கூடிய அளவு பெரியபாறைகள் அவை. அவற்றை தனித்தனியே ஆளுக்கு ஒன்றாகத் தூக்கிக் கொண்டு, செங்குத்தான கோட்டைக்குச் சுவர்மீது ஏறிய வீரர்களின் உருவம், தீவட்டி ஒளியில் வெகுதூரம் வரை தெரிந்தது. மன்னன் நினைத்ததைப் போலவே, அந்தக் காட்சியை தொலைவில் இருந்து நோட்டம் விட்டார்கள், எதிரி நாட்டு ஒற்றர்கள். அவசரம் அவசரமாக தங்கள் நாட்டு மன்னனுக்குத் தகவல் அனுப்பினார்கள். வேந்தே படையெடுப்பை உடனடியாக நிறுத்துங்கள். இந்த நாட்டு வீரர்கள், நாம் நினைத்ததுபோல் வீணர்கள் அல்லர். இவர்களில் ஒருவர் தான் சுமந்து செல்லும் பாறையை உருட்டிவிட்டாலே போதும், நம் வீரர்களில் பாதிப்பேர் பலியாகிவிடுவார்கள். அந்த சுவடே தெரியாமல் திரும்பிச் சென்றுவிடுவதுதான் நல்லது...! இப்படி ஒரு தகவல் கிடைத்தபிறகு எவருக்காவது படையெடுத்துவர தைரியம் வருமா? அதனால் எதிரிகளே இல்லாமல் நிம்மதியாக அரசுபுரிந்தான் அமைதி நாட்டு அரசன்.
போர்ப் பயிற்சியே இல்லாத வீரர்கள், பலசாலிகளாக மாறி பெரிய பெரிய பாறைகளைத் தூக்கிச் சென்றது எப்படி? என்று தோன்றுகிறதா. அதற்குக் காரணம், அந்த மன்னன் செய்த தந்திரம்தான். கோட்டையின் மீது ஏறிய வீரர்கள் சுமந்த அந்தப் பாறைகள் அனைத்தும் கனமே இல்லாத பொருட்களால் பார்ப்பதற்கு நிஜமான பாறைகள் போல் செய்யப்பட்டவை. கனமில்லாத பாறைகளைத் தூக்கிக் கொண்டு ஏறிய வீரர்களில் ஓரிருவரை குறிப்பிட்ட இடம் வந்ததும் பாறைகளை தவறி கீழே போடுவது போல் நடிக்கச் சொன்னான் அரசன். அவர்களும் அப்படியே செய்ய, சரியாக அதே சமயத்தில் ஏற்கனவே பலவீரர்கள் சேர்ந்து சுமந்து சென்று உச்சியில் வைத்திருந்த சில நிஜமான பெரிய பாறைகளை உருட்டிவிடச் செய்தான் மன்னன். அவ்வளவு தான், கீழே விழுந்தவை போன்ற பாறைகளைத் தான் வீரர்கள் தனித்தனியாக சுமந்து செல்வதாக நினைத்தார்கள் எதிரியின் ஒற்றர்கள். இப்படித்தான் ஒவ்வொருவரது மனதையும் பாறையைப் போல் திடமாக வைத்துக் கொண்டால் தோல்வி என்பதே இல்லாமல் போய்விடும்.
|
|
|
|