|
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம். அதில், (சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில்) எட்டாவது குரு பீடமாய் வீற்றிருந்து அருள்பாலித்தடர் ஸ்ரீமத் தென்பிறை ஆண்டவன் ரெங்கநாத மகாதேசிகன் என்ற மகான் ஆவார். தமது ஆசிரமத்துக்கு வரும் சீடர்களுக்கு அரிய விஷயங்களை எளிய விதத்தில் விளக்கி, ஆசி வழங்குவது அவரது வழக்கம்.
ஒருமுறை தமது ஆசிரமத்தில் கூடியிருந்த சீடர்களிடத்தில், பகவான் ஸ்ரீமந்நாராயணன் மோகினி அவதாரம் எடுத்து பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு மட்டுமே கிடைக்குமாறு அருள் செய்ததை எடுத்துக் கூறினார். பிரவசனத்தின் முடிவில் அவரை நெருங்கிய சீடர் ஒருவர் விண்ணப்பித்தார்.
சுவாமி! அடியேனை மன்னிக்க வேண்டும். என்னதான் பெருமாளே மோகினி அவதாரம் எடுத்து வந்திருந்தாலும், தேவர்களுடன் சேர்ந்து தாங்களும் கஷ்டப்பட்டு பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமுதத்தை அசுரர்கள் கோட்டை விட்டார்கள் என்பதை அடியேனால் ஏற்க முடியவில்லை. தேவரீர் இதற்கு ஒரு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
சுவாமிகள் சிறிது நேரம் யோசித்துவிட்டு, நீ சொல்வதும் சரிதான். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. யோசித்து இதற்கொரு சமாதானம் சொல்கிறேன்.. என்று பதில் கூறி, அந்தச் சீடரை அனுப்பி வைத்தார்.
சில நாட்கள் கழித்து ஆசிரமத்துக்கு கவலையுடன் வந்தார் அந்த சீடர்.
என்ன, என்னமோ போல் இருக்கே? என்று பரிவுடன் கேட்டார் சுவாமி.
பர்சுடன் அடியேனுடைய ஒரு மாச சம்பளம் பிக் பாக்கெட்டில் போய்விட்டது சுவாமி! என்றார் சீடர், வருத்தம் தோய்ந்த குரலில்.
எப்படிப் பறிபோனது...?
பிரபல நடிகர் பொம்பளை வேஷம் போடும் நாடகத்துக்கு டிக்கெட் வாங்குவதற்காக கியூவில் நிற்கும்போது, அந்தக் கூட்டத்தில் யாரோ பிக் பாக்கெட் அடித்துவிட்டார்கள் சுவாமி!
பாவம்! நீயே சம்பளப் பணத்தை, கோட்டை விட்டு வந்திருக்கிறாய். இந்த நேரத்தில் இதைச் சொல்வதற்கு என் மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், விஷயத்தை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
அன்றைக்கு மோகினி அவதாரக் கதையை நம்ப முடியலேன்னு சொன்னாயே! நம்மளைப் போல ஒரு சாதாரண மனுஷன் பொம்மனாட்டி வேஷம் போட்ட நாடகத்தைப் பார்க்கப் போய், உன் ஒரு மாச சம்பளத்தையே கோட்டை விட்டிருக்கே! சாட்சாத் ஜகன் மோகனனாகிய பகவான் பொம்மனாட்டி (மோகினி) வேஷம் கட்டினா, அது எப்படி ஆச்சரியமா இருந்திருக்கும்? அசுராள் எல்லாம் அவருடைய ரூப சவுந்தர்யத்தைப் பார்த்து எப்படி அம்ருதத்தைக் கோட்டை விடாமல் இருந்திருப்பா? இப்ப நீயே சொல்லு...! என்றார் ஸ்ரீமத் ஆண்டவன்.
தவறை உணர்ந்த சீடர், சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கோரினார். சுவாமியும் அவரை மன்னித்து, கவலைப்படாதே! நீ கோட்டை விட்டதைப் போல ஒண்ணுக்குப் பத்தாக பகவான் உனக்குத் திருப்பிக் கொடுப்பார்... என்று அவரை ஆசீர்வதித்து அனுப்பினார். |
|
|
|