|
மந்திரங்கள் நிறைந்த நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான் ஓர் அரசன். அவற்றைப் படித்தால் மட்டும் போதாது. தக்க குருவிடம் சென்று பயிற்சி செய்ய வேண்டும் என்றார், அரண்மனை ஜோதிடர். ஆனால் மன்னன் அவரைக் கோபத்தோடு பார்த்தான். இவற்றைச் சொன்னால் பலன் கிட்டும் என்று போட்டிருக்கும்போது தனியாக எதற்கு ஒரு உபதேசம்? என்று சீறினான். யாரங்கே... என் வார்த்தையை மறுத்துப் பேசும் இவரை உடனே கைது செய்யுங்கள்.! சட்டென்று குரல் எழுப்பினார் ஜோதிடர். வீரர்கள் கொஞ்சமும் அசையாமல் நிற்க, அரசனின் கோபம் அதிகரித்தது. வீரர்களே, இந்த ஜோதிடரை உடனே சிறைப்படுத்துங்கள்! கட்டளையிட்டான். மறுகணம் வீரர்கள் ஜோதிடரை நெருங்கினார்கள். அமைதியாக நின்ற ஜோதிடர் சொன்னார், மன்னா! மன்னிக்க வேண்டும்.. இப்போது நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நானும் சொன்னேன். ஆனால் எது பலனளித்தது? இதேபோல்தான் மந்திரங்களும் முறையறிந்து சொல்பவர் சொன்னால் மட்டுமே பலன் கிட்டும்.! உணர்ந்த அரசன் ஜோதிடருக்குப் பரிசளித்து கவுரவித்தான். |
|
|
|