|
துறவி ஒருவர் சீடனுடன் வனம் ஒன்றின் வழியே பயணம் செய்துகொண்டிருந்தார். வழியில் ஒருவன் உரத்த குரலில், இறைவனே ! எங்கே இருக்கிறாய் நீ? என்னாலான உதவியை உனக்குச் செய்ய ஆசைப்படுகிறேன். உன் கால்களுக்கு செருப்பை அணிவிக்கிறேன். நடந்து களைப்பாக இருந்தால் உன் கால்களை இதமாகப் பிடித்து விடுகிறேன். நீ நன்றாகத் தூங்க விசிறியால் விசிறுகிறேன். சுவையான பாலைப் பருகத் தருகிறேன். உன் அறையைத் தூய்மைப்படுத்தி மலர்களால் வாசம் வீசச் செய்கிறேன் என்றான். இதைக் கேட்டு துறவி புன்னகை புரிய, சீடனோ கடும் கோபம் கொண்டு, முட்டாளே! நீ இறைவனைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? அவர் எங்கும் நிறைந்தவர். எல்லாம் செய்ய வல்லவர். உன் தோழனிடம் பேசுவது போல அவரிடம் பேசுகிறாயே! உன்னால் அவர் இருக்கும் இடத்தைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அவருக்கு உன்னால் பாதுகைகளை அணிவிக்க முடியுமா? இனி இப்படிப் பிதற்றுவதை விட்டுவிடு! என்றான். சீடனை கடிந்து கொண்ட குரு, கடவுளிடமிருந்து அடியவன் ஒருவனைப் பிரித்து விட்டாயே! இப்படி வழிபடுவது இறைவனுக்குப் பிடிக்காது என்று யார் உனக்குச் சொன்னார்கள்? அவரவர் தகுதிக்கு ஏற்ப கடவுளை வழிபடுகிறார்கள். எல்லாருடைய வழிபாட்டையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் எனக் கூற, கடவுள் தன்மை உணர்ந்தான் சீடன். |
|
|
|