|
க்ரோதஹ பிராணஹரஹ சத்ருஹு க்ரோதோ மித்ரமுகோ ரிபுஹு
க்ரோதோ ஹ்யாசிர் மகாதீக்ஷ்ணஹ சர்வம் க்ரோதோ அபகர்ஷ்யதி
தபேத யஜதே சைவ யச்ச தானம் ப்ரயச்சதி குரோதேன சர்வம் ஹரதி தஸ்மாத் குரோதம் விசர்ஜயேத்
பொழிப்புரை 21: கோபம், உயிரைக் கொள்ளை கொள்ளும் எதிரி. கோபம் மிகவும் கூர்மையான கத்தி. நல்ல குணங்களையும் அது வேரோடு மாய்க்கிறது.
22. தவம், யாகம், தானம் முதலிய வைதீக லௌகீக காரியங்கள் தரும் பயன்கள் எல்லாமே கோபத்தால் அழிகின்றன. எனவே, கோபத்தை விலக்குக.
ஆதி காவியத்தின் உத்தர காண்டத்தில் ஸ்ரீராமர் நியாயம் கூறிய ஒரு வழக்கைக் காணலாம்.
ஸ்ரீராமரின் ஆட்சியில் சர்வார்த்த சித்தன் எனும் பிட்சு வசித்து வந்தார். அந்த பிட்சு ஒரு நாள், கோபத்தில் ஒரு நாயை அதன் தலையில் அடித்துவிட, அதன் மண்டையில் இருந்து ரத்தம் பெருகியது. ராமரின் நியாயசபை வாயிலில் வந்து நின்று விடாமல் அது குரைத்தது.
லட்சுமணன் மூலம் விவரம் அறிந்த ராமர், அந்த நாயை உடனே உள்ளே அழைத்து வர உத்தரவிட்டார். அதனிடம், உனக்கு வேண்டியதை பயப்படாமல் கேள் என்றார். அடிபட்ட நாய், அரசே! சர்வார்த்த சித்தன் என்ற பிட்சு என்னிடத்தில் யாதொரு குற்றமும் இல்லாதிருக்க என்னைத் தடியால் அடித்தார் என்றது. ஸ்ரீராமர் அந்த பிட்சுவை வரவழைத்து அவரிடம், இந்த நாயை தடியால் அடித்தீர்களா? உங்களை அது என்ன செய்தது? எனக் கேட்ட ஸ்ரீராமர், மேற்கண்ட சுலோகங்களைக் கூறினார்.
பசியாலும், பிட்சை கிடைக்கவில்லை என்ற கோபத்தாலும் நிலைதவறி தடியால் இதன் தலையில் அடித்தேன். என்னை விதிப்படி தண்டியுங்கள் என்றார் அந்த பிட்சு. அப்போது,
அரசே! இவரை கோயில் தர்மகர்த்தாவாக நியமியுங்கள் என்ற நாய், தொடர்ந்து சொன்னது: சென்ற பிறவியில் நானும் ஒரு கோவில் தர்மகர்த்தாவாக இருந்தேன். புண்ணியத்திலேயே மனதைச் செலுத்தினேன். இருந்தும், இந்த கீழான பிறவியை அடைந்தேன்.
சர்வார்த்த சித்தன், சுபாவத்தில் கோபக்காரன். ஞானம் இல்லாதவன். பிறர் மீது கோபம் கொண்டால் அவனுடைய பதினான்கு தலைமுறைகள் நாசம் அடையும். ஒருவனை புத்திர, மித்திர, பந்துக்களுடன் நரகத்துக்கு அனுப்ப வேண்டும் என நினைத்தால், அவனை தேவதைகளுக்கும், பசுக்களுக்கும், பெண்களுக்கும், பாலர்களுக்கும், பிரம்மணர்களுக்கும் விடப்பட்ட திரவியங்களை பாதுகாக்கும் அதிகாரியாக நியமித்தால் போதும். இதனால், அவன் அறியாமலே அவனுக்கு பாபம் சேருகிறது. அவற்றை மனதால் விரும்பினாலும், அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் நரகத்துக்குச் செல்கிறார்கள் என்றது நாய்.
கோபத்தின் விளைவு மட்டுமல்ல; ஆலயப் பொறுப்பில் தவறினாலும் விபரீதம் என அறிந்தால், நமக்கும் நடுக்கம்தான் ஏற்படுகிறது இல்லையா?
|
|
|
|