|
குரு ஒருவரிடம், உபதேசக் கூட்டத்தில் சீடன் ஒருவன் தன் நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்டான். சுவாமி! பொருளாசை வற்றினால்தான் ஆன்மிக விழிப்பு ஏற்படும் என்கிறீர்களே... அப்படியானால் பொருளாசை கொண்டவர்களிடம் உள்ள ஆன்மிக நிலை விழிப்புணர்வு அற்றதா? இளந்தேங்காயில் நீர்வற்றாத வரை அதனுடைய பருப்பையும் ஓட்டையும் தனியே பிரிப்பது கடினம். அதுவே நீர் வற்றிவிட்டால் உள்ளே பருப்பு குடு குடு என ஆடுகிறது. ஓட்டிலிருந்து பருப்பு தனியாகிவிடுகிறது. அதைப் போலவே பொருளாசை உள்ளவரை உடல் பற்று அழிவதில்லை. பொருளாசை அடியோடு அழிந்தால்தான் ஆத்ம ஞானம் ஏற்படுகிறது. அதாவது ஆத்மா தனி, உடல் தனி என்ற உணர்வு அப்போதுதான் உண்டாகிறது. நீர் வற்றியதும் தேங்காயின் ஓடு தனி, பருப்பு தனி என ஆவது போல், பொருள் மேல் வைக்கப்படும் பற்று மறைந்ததும் உடல் வேறு, ஆத்மா வேறு என்ற ஞானம் தோன்றும்.
அடுத்து நெருப்புக் குச்சி நன்றாக உலர்ந்திருந்தால் ஒருமுறை கிழித்த உடனேயே குப்பென்று பற்றிக் கொள்கிறது. ஆனால் ஈரமான குச்சியை எத்தனை முறை கிழித்தாலும் அதில் தீப்பற்றுவதில்லை. அதைப்போலவே பொருளாசையில் ஊறிக்கிடக்கும் மனத்தில் இறைவனைப் பற்றிய விழிப்பு உண்டாவதில்லை. ஆயிரம் முறை முயற்சி செய்தாலும் அது வீணான முயற்சிதான். பொருளாசை வற்றினால்தான் ஆன்மிக விழிப்பு உண்டாகும். எனவே தேங்காய், தீப்பெட்டியில் ஈரம் இருப்பதும் மனதில் பொருளாசை இருப்பதும் ஒன்றெனக் கொள்ளலாம் என குரு முடிக்க, சந்தேகம் தீர்ந்தது சீடனுக்கு! |
|
|
|