|
ஆசிரமத்திலிருந்த சீடர்களுள் ஒருவன் நேர்மையான சிந்தனை கொண்டவன். அதனால் குரு அவனையே முதன்மைச் சீடனாக தேர்ந்தெடுத்தார். இரண்டாம் நிலையில் உள்ள சீடன் குருவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஏதாவது செய்வான். ஆனால் அது குருவுக்கு பிடிக்காது. ஒரு சமயம் குரு நந்தவனம் சென்றிருந்தபோது, இரண்டாம் சீடன் குரு ஆசையாக வைத்திருந்த மண் பொம்மை ஒன்றை கைதவறி கீழே போட்டு உடைத்து விட்டான். இதனால் முதல் சீடனிடம் சென்று, தன்னை குருவிடமிருந்து காப்பாற்றும்படி வேண்டினான். சம்பவத்தை அமைதியாகக் கேட்ட முதல் சீடன், குரு ஆசிரமம் திரும்பியதும், சுவாமி! எனக்கு ஒரு சந்தேகம்! என ஆரம்பித்தான். கேள் மகனே! என்றார் குரு. உலகில் உருவான எந்தப் பொருளுக்கும் அல்லது உயிருக்கும் அழிவு இல்லாமல் இருக்குமா சுவாமி! உலகில் தோன்றிய எல்லாவற்றிற்கும் அழிவு நிச்சயம் உண்டு! என்றார் குரு. உடனே சற்றும் தாமதிக்காத பிரதான சிடன், குருவே! நீங்கள் ஆசையாய் வைத்திருந்த மண் பொம்மைக்கு இன்று அழிவு நிகழ்ந்து விட்டது என்றான். புன்னகைத்த குரு, உன்னை நான் பிரதமச் சீடனாக அறிவித்ததற்குக் காரணம் உன் அறிவை மற்றவர் நலனுக்காக பயன்படுத்துகிறாய் என்பதனால்தான். பிறர் நலன் காப்பதே இறைவன் திருவடியை நெருங்கி விட்டதன் பொருள்! எனக்கூறி பிரதான சீடனை ஆசிர்வதித்தார். |
|
|
|