|
மிதிலை மாநகரை ஆண்டு வந்த மன்னர் நேமி, அறத்திலும் ஆட்சித்திறனிலும் நிகரற்றவர்! அவருடைய புகழ் பாரெங்கும் பரவியது. எனினும் மன்னருக்கு மனசாந்தி ஏற்படவில்லை. இதன் காரணம் மன்னருக்கே விளங்கவில்லை. ஒருநாள், மன்னர் உப்பரிகையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வானில் ஒரு விசித்திரமான காட்சி. பருந்தொன்று, இறைச்சித் துண்டத்தினை கவ்வியவாறே வேகமாய் பறந்து வந்தது. இறைச்சிக்காக, பல பறவைகள் அப்பருந்தினை தாக்கியவாறே பின் தொடர்ந்தன. தாக்குதல் மும்முரமாகவே நடந்தது. பருந்தும் அவற்றிடமிருந்து தப்பிக்க எங்கெங்கோ பாய்ந்தாலும், தாக்குப் பிடிக்க முடியாமல் துண்டத்தினை கீழே போட்டு விட்டது. அதனை வேறொரு பறவை கவ்விக் கொண்டது. இப்பொழுது, எல்லா பறவைகளும் பருந்தை விட்டு விட்டு புதுப்பறவையினை தாக்கலாயின. இறைச்சியை இழந்த பருந்தோ நிம்மதியாக பறந்தது. இக்காட்சியைக் கண்ட மன்னருக்கு பெரியதொரு உண்மை புலப்பட்டது. இறைச்சியை வைத்திருக்கும் பறவை தாக்கப்படுவதைப் போல, உலக பொருட்களின் மீது பற்று வைத்திருப்பவரையே, துன்பம் தாக்குகிறது. ஊன்துண்டை விட்டு விட்ட பருந்து நிம்மதியடைவதைப் போல, உலகப் பற்றை துறப்பவர்கள் மன நிம்மதி அடைகின்றனர். இதுவே உலக நியதி என்று உணர்ந்தார் மன்னர். அவருக்கு மனத்தில் தெளிவு பிறந்தது. அன்றே போக வாழ்வினைத் துறந்து யோக வாழ்வினை மேற்கொண்டு விட்டார், மன்னர் நேமி. |
|
|
|