|
சுவாமி வீதியுலா வந்துகொண்டிருந்தார். அதற்கு முன் மகான் ஒருவர் பாடிக்கொண்டே சென்று கொண்டிருந்தார். அப்போது பக்தன் ஒருவனை அவன் வீட்டின் முன் கண்டு, உன்னை கோயிலில் பார்த்து நீண்ட காலம் ஆகிறதே! இப்போதெல்லாம் நீ ஏன் கோயில் வழிபாட்டில் கலந்து கொள்வதில்லை? எனக் கேட்டார், மகான். ஐயா! என் வயல் வெளியிலும் தோட்டத்திலும் மரங்களிலும் நான் இறைவனைப் பார்க்கிறேன். அவருடன் பேசுகிறேன். எனவே நான் கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை! என்றான். அப்படியா! என்ற மகான் அவன் கையைப் பற்றிக்கொண்டு அவன் இல்லத்திற்குள் நுழைந்தார். அங்கே அடுப்பில் நிறைய விறகுகள் ஒன்று சேர்ந்து எரிந்து கொண்டிருந்தன. அவற்றிலிருந்து ஒரே ஒரு விறகை வெளியே இழுத்த மகான், அதை தனியே வைத்தார். எரிவது குறைந்துகொண்டே வர, இறுதியில் அந்த விறகு புகையை மட்டும் வெளிப்படுத்தியது. அவனைப் பார்த்த அவர், இந்த விறகுக்கு என்ன நிகழ்ந்தது பார்த்தாயா? என்று கேட்டார். ஐயா! இனி நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம். மனிதன் தனியாக வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டேன். இனி நான் தினசரி கோயில் வந்து, கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்கிறேன்! என்றான்.
|
|
|
|