|
மகான் ஒருவரிடம் வந்த ஏழைத்தாய், ஐயா! எனது மகன் என் சொற்களை மதிப்பதே இல்லை. நான் சொல்வதற்கு நேர் மாறாகச் செய்கிறான். வீட்டில் பணம் திருடி ஊதாரியாய் செலவு செய்கிறான். நீங்கள் அவனுக்கு அறிவுரை சொல்லி பொறுப்புள்ளவனாக மாற்ற வேண்டும் என்றாள். மறுநாள் மகான் அந்த ஏழைத்தாய் வீட்டிற்குச் சென்று அவள் மகனிடம் அன்று முழுவதும் கதை பேசிக்கொண்டிருந்தார். அறிவுரை சொல்ல அழைத்தோம். ஆனால் மகான், மகனிடம் சிரித்து வெட்டிக்கதை பேசிக் கொண்டிருக்கிறாரே! என தாய்க்கு வருத்தம். மகான் ஏதாவது அறிவுரை சொல்வார். அதை ஒரு காதில் வாங்கி மற்றொரு காது வழியே வெளியே விட்டு விடலாம்! என நினைத்திருந்த மகனுக்கோ ஆச்சர்யம்! மாலை ஆசிரமம் திரும்ப நினைத்த குரு, சரி, நான் கிளம்புகிறேன்! என்று கூறி, சுவரில் சாய்த்து வைத்திருந்த தன் ஊன்றுகோலை எடுக்க முயற்சித்தார். அது கீழே விழுந்ததைக் கண்டு, அவனை அழைத்து, கீழே விழுந்துள்ள என் தடியை எடுத்துக் கொடு! என்றார். அவனும் அவ்வாறே செய்தான். உன்னைப் போன்ற இளம் வயதில் எனது உடலில் அற்புதமான வலிமை இருந்தது. ஆனால் வயதானவுடன் குனியக்கூட முடியவில்லை. நீயும் என்னைப்போல் வயதானவுடன் பிறர் உதவியை நாடவேண்டியிருக்கும்! என்றார் மகான். அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்த அவன், தன் வயதான அம்மாவைப் பார்த்தான். அந்நொடியில் தன் தவறுகளை உணர்ந்து, இனி அம்மாவின் சொல்படி நடப்பேன் ! என மகானிடம் உறுதி தந்தான். |
|
|
|