|
ஞானி ஒருவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தார். அந்நாட்டு அரசர் அவரை பார்ப்பதற்காக வந்தார்.அரசரைக் கண்டும் அவர் படுக்கையிலிருந்து எழாமல், அரசே ! தள்ளாடும் முதியவன் நான். படுக்கையிலிருந்து எழுந்து உங்களை வரவேற்க முடியவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்! என்றார். அதற்காக வருந்த வேண்டாம். படுத்தபடியே இருங்கள்! என்ற மன்னன், ஞானியிடம் நீண்ட நேரம் பேசிவிட்டு அரண்மனை திரும்பினார். பின்னர் படைத்தலைவன் ஒருவனிடம் பொற்காசு பையைக் கொடுத்து, அதை ஞானியிடம் கொடுத்து வரச் சொன்னார். படைத்தலைவன் வந்திருக்கிறான் என்பதை அறிந்த ஞானி, படுக்கையிலிருந்து எழுந்து வாயில் வரை சென்று படைத்தலைவனை வரவேற்றார். இதைப்பார்த்து வியப்படைந்த சீடர்கள், குருவே! நீங்கள் அரசரை வாயில் வரை சென்ற வரவேற்று இருக்க வேண்டும். படைத்தலைவனிடம் படுக்கையில் படுத்தபடியே பேசி அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ மாறுபாடாக நடந்து கொண்டீர்களே! எங்களுக்கு காரணம் புரியவில்லையே! என்று கேட்டனர். அதற்கு அவர், மூன்று வகையான விருந்தினர்கள் உள்ளார்கள். மதிப்பிற்குரிய விருந்தினர்களை படுக்கையில் படுத்தபடியே வரவேற்கலாம். அவர்கள் தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள். பழக்கமான, இயல்பான விருந்தினர்களை அறையில் இருந்தபடியே வரவேற்கலாம். ஆனால் சாதாரண விருந்தினர்களை வாயில் வரை சென்று வரவேற்க வேண்டும்! என்றார்.
|
|
|
|