|
பணக்காரன் ஒருவரிடம் நிறைய செல்வம் இருந்தது. ஆனால், மனதில் நிம்மதியே இல்லை. தன் ஊருக்கு வந்த துறவி ஒருவரை சந்தித்த அவன், தனது நிலையை அவரிடம் சொன்னான். அவன் சொன்ன அனைத்தையும் கேட்ட துறவி, அப்பனே, உன் செல்வம் முழுவதையும் பெரிய மூட்டையில் கட்டி எடுத்துவா. அதில் இருக்கும் தோஷத்தைப் போக்குகிறேன்! என்றார். செல்வந்தனும் அப்படியே செய்தான். பண மூட்டையை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்த துறவி, சட்டென்று அதனைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். அதனை சற்றும் எதிர்பாராத பணக்காரன், பதறிப்போய் அவரைப் பிடிக்க ஓடினான். இயல்பாகவே உள்ள ஆற்றலால் வெகுதூரம் களைக்காமல் ஓடினார். துறவி. பணக்காரனுக்கு மூச்சு இரைத்தது. ஓடி முடித்து, தொடங்கிய இடத்திலேயே வந்து நின்ற துறவி, பண மூட்டையை கீழே வைத்தார். களைப்பையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்து அதனை எடுத்துக் கொண்டு, நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான் பணக்காரன். துறவி சிரித்துக்கொண்டே சொன்னார். ஏனப்பா இந்த செல்வம் முதலில் உன்னிடமேதானே இருந்தது. அப்போது இல்லாத நிம்மதி இப்போது எப்படி வந்தது? ஒன்றைப் புரிந்துகொள், நிம்மதி என்பது வேறுஎங்கோ இல்லை. அது உன்னிடமேதான் இருக்கிறது. நீதான் அதனை உன் செயல்களால் வெளிக்கொணர வேண்டும்..! உணர்ந்த செல்வந்தன் நிம்மதியாகத் திரும்பினான்.
|
|
|
|