|
குருவுடன் கடைத் தெரு வழியே சென்று கொண்டிருந்த சீடன் ஒருவன். சில கடைகளில் கண்ணாடிக் குடுவைகளில் வண்ணத் திரவியங்களை நிரப்பி வைத்திருப்பதைப் பார்த்தான். அவை எதற்காக வைக்கப்பட்டுள்ளன என அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பாத்திர வேலை செய்யும் ஒருவன் அங்கு வந்து, தான் கொண்டு வந்த பழுப்பேறிய வெண்கலப் பானையை அந்த திரவக் குடுவைக்குள் முக்கி எடுத்தான். உடனே அந்த வெண்கலப் பானையின் பழுப்பு நிறம் நீங்கி, பளபளத்தது. பிறகு அவன் அதே பானையை இன்னொரு வண்ணத்திரவம் இருந்த குடுவைக்குள் முக்கி எடுக்க, இப்போது அதே வெண்கலப்பானை தங்கப்பானை போல ஜொலிக்க ஆரம்பித்தது. இதையெல்லாம் கவனித்த குரு, இவ்வளவு நேரம் அந்த பாத்திக்காரன் செய்ததையெல்லாம் கவனித்தாய் அல்லவா? இதை ஆன்மிகத்தோடு எப்படி தொடர்புபடுத்துவாய்? எனக் கேள்வி கேட்க, சீடன் விழித்தான். முதல் வகை திரவத்தில் முக்கி எடுக்கப்பட்டதும், பழுப்பேறிய வெண்கலப்பானையின் பழுப்புநிறம் நீங்குவது போல், நம் மனதை இறை நாமம் என்னும் குடுவைக்குள் வைத்து எடுத்தால், கெட்ட எண்ணங்கள் என்ற அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும். பிறகு அந்த மனதை இறைவனின் கருணை எனும் வேறொரு வண்ணத்திரவம் அடங்கிய குடுவைக்குள் முக்கி எடுத்தால், நமது உண்மையான இயல்பு எப்படி சுடர்விடுகிறது எனப் பார்க்கலாம் என்றார் குரு.
|
|
|
|