|
குரு ஒருவர் ஒவ்வொரு நாளும் தமது சீடர்களுக்கு நற்போதனை வழங்குவதோடு, மாலை வேளையில் தோட்டத்திற்குச் சென்று அங்கு அனைத்து பணிகளையும் செய்து வந்தார். தங்களது குரு தள்ளாத வயதில் தோட்ட வேலைகளை செய்வதை பொறுக்காத சீடர்கள், சுவாமி! உடல் தளர்ந்த நிலையில் இருக்கும் தாங்கள் தோட்ட வேலை செய்யாமல் ஓய்வெடுங்கள். நாங்கள் உங்கள் வேலையையும் சேர்த்து செய்துவிடுகிறோம் என்று சொல்லிப் பார்த்தனர். குருவோ சீடர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காது தனது வேலையை தொடர்ந்து செய்து வந்தார். இதனைக் கண்ட சீடர்கள், மண் வெட்டியிருந்தால் தானே தோட்டத்தில் வேலை செய்வார். இல்லையென்றால் வேலை செய்யாமல் ஓய்வெடுப்பார் இல்லையா? என்ற எண்ணத்தில் ஒருநாள் மண் வெட்டியை ஒளித்து வைத்தனர். மறுநாள் சீடர்களுக்குப் போதனையளித்துவிட்டு தோட்ட வேலை செய்ய மண்வெட்டியைத் தேடினார் குரு. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. யாரிடமும் மண்வெட்டி எங்கே? என்று கேட்காமல் அன்று முழுவதும் உண்ணாதிருந்தார். உணவு உண்ணாத காரணத்தை சீடர்கள் அவரிடம் கேட்டனர். சீடர்களே! உழைக்காதவன் உண்ண உரிமை இல்லாதவன். அந்த வழியில் இன்று நான் உழைக்கவில்லை. அதனால் உண்ணவில்லை! என்றார். உழைக்காமல் உண்ணக்கூடாது என்ற குருவின் உயர்ந்த எண்ணத்தை சீடர்களும் பின்பற்றப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டனர்.
|
|
|
|