|
ஞானி ஒருவரிடம் வந்த முதியவர், சுவாமி! வர வர என்னால் என் வீட்டிலிருந்து வெளியே தெரியும் இயற்கையின் அழகை ரசிக்க முடியவில்லை. என் கண்பார்வை மங்குகிறதோ என கவலையாக உள்ளது. அதே போல் கடவுளை நினைத்து தெளிவாக தியானம் செய்ய முடியவில்லை. வயாதகியதால்தான் இந்தப் பிரச்னையா எனத் தெரியவில்லை! எனக் குறைபட்டுக் கொண்டார். ஞானி எந்த ஆறுதலும் கூறாமல் முதியவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அவரது அறைக்குச் சென்று உற்று கவனித்து, பின் ஒரு வாளியில் நீரும் சிறு துணியும் கொண்டு வரச் சொன்னார். நீரில் முக்கிய துணியைக் கொண்டு அறை ஜன்னலின் கண்ணாடியை வெளிப்புறமாகத் துடைத்தார் அதில் இருந்த அழுக்கு நீங்கி கண்ணாடி பளிச்சென ஆனது. இப்பொழுது அவரை ஜன்னல் வழியே வெளியே பார்க்கச் சொன்னார் குரு. இயற்கை அழகு தெளிவாகத் தெரிந்ததால் முதியவருக்கு ஆனந்தம். அதைக் கண்டு குரு கூறினார். இயற்கை அழகு சரியாகத் தெரியாததற்கு கண் பார்வை காரணம் அல்ல படிந்திருந்த தூசியும் அழுக்குமே காரணம். அதைப் போலவே இறைவனை தியானிக்க முடியாததற்குக் காரணம் முதுமையல்ல. உங்கள் மனதில் படிந்திருக்கும் கோபமும் பொறாமையுமே காரணம். அவற்றை விலக்கிவிட்டால் இறைவனை நன்கு தியானிக்கலாம். அதைக் கேட்ட பெரியவரின் கவலை தீர்ந்தது.
|
|
|
|