|
அசோகவனத்தில் அன்னை சீதா பிராட்டியைக் கண்ட அனுமன், தாயே, நாமபிரான் தங்களுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்த நிகழ்ச்சிகளை என்னிடம் கூறியுள்ளார் என்று கூறத் தொடங்கினார்: தங்களது திருமணம் நடந்த மறுநாள் இரவு, ராமபிரான் உங்களை நோக்கி தமது கால்களைப் பிடித்துவிடுமாறு கூறினாராம். உடனே தாங்கள் உங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களைக் கழற்றி வைத்துவிட்டுப் பிடித்தீர்களாம். கை வளையல்களைக் கழற்றக் காரணம் என்ன என்று பிரபு கேட்க, கௌதமருடைய ஆசிரமத்தில் தங்களது திருவடிகள்பட்டு, ஒரு கல் அகலிகை என்ற பெண்ணாக மாறிய தாமே! எனது கை வளையல்களில் கற்கள் பல பதிக்கப்பட்டுள்ளன என்று புன்முறுவலுடன் கூறினீர்களாமே! என்றார்.
இதைக் கேட்ட சீதாபிராட்டியின் முகம் மலர்ந்தது. அனுமன், மற்றொரு நிகழ்ச்சியையும் கூறலானார்:
உங்கள் திருமண நாளன்று இரவிலே ராஜ வீதிகளின் வழியாக பவனி வரும்போது, விளையாட்டாக ராமபிரான் தனது வலது காலால் உங்களது இடதுகால் சுண்டுவிரலை அழுத்தினாராம். உடன் உங்கள் முகம் சிவந்து, கண்களில் கண்ணீர் ததும்பியதாம்!
பின்பு பஞ்சவடியில் தங்கியிருந்த போது தங்களின் பாதங்கள், கற்களிலும் கரடுமுரடான பாதைகளிலும் நடந்தால் சிவந்து போயிருப்பதைக் கண்ட ராமபிரான் மனவேதனையுடன், ஜானகி! திருமணத்தன்று என் கால் அழுத்தத்தையே தாங்கிடாத நீ, இப்போது எனக்காக எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது என்று கூறி வருந்தினாராம். இந்த இரண்டுமே, தங்களுக்கும் ராமபிரானுக்கும் மட்டுமே தெரிந்தவை என்றார் அனுமன். இதனால், சீதாப் பிராட்டிக்கு அனுமன் மீதிருந்த தயக்கமும் குழப்பமும் மறைந்தன. |
|
|
|