|
தாட்சாயணி, என்ன கோபம் உனக்கு? மென்மையாகத்தான் கேட்டார் சிவபிரான். ஆனால், கடும்வேகத்தில் வந்தது பதில்:
ஏன்? தங்களை அவமதித்த தட்சனின் மகள் என்று சொல்கிறீர்களாக்கும்?
இல்லை. மலைமகளான நீ கோபப்படும் அளவுக்கு யார் என்ன செய்தார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான்... பெருமான் முடிக்கும் முன்பே இதற்கும் பதில் வந்தது.
என்ன? மலைமகள் என்பதால் என் மனம் கல்லாக இருக்கிறதாக்கும்?
வார்த்தைகளுக்குள் புகுந்து விளையாடும் பெருமானுக்கே பேச்சு தடைப்பட்டது. உமையின் முகமோ கோபத்தால் சிவந்து கிடந்தது. மூக்குத்தியில் பதிந்திருந்த மாணிக்கங்களின் ஒளி கன்னங்களில் பிரதிபலித்து, கோபச் செம்மையை அதிகரிப்பது போலத் தோன்றியது.
என்ன கோபம் இப்போது? தேவியை ஒதுக்கிவிட்டு தன்னை மட்டுமே வண்டு உருவில் வலம் வந்த பிருங்கி முனிவரை தண்டிக்கவில்லை. என்பதால் ஏற்பட்ட சினமா? தனக்கு உடலில் பாதியை அளித்துவிட்டு, கங்கைக்கு என் தலையில் இடம் கொடுத்ததால் உண்டான கோபமா?- காரணம் புரியாத அந்தக் கோபத்தால் கவலையின் வசப்பட்டார் சிவபிரான். தேவியோ தன் திருமுகத்தைத் திருப்பவே இல்லை.
ஈசனின் குடும்பமானால் என்ன? ஊடல் ஏற்பட்டதென்றால், விட்டுக் கொடுத்து சமாதனப்படுத்த வேண்டியது ஆணுக்குரியது தானே என்று நினைத்தார் முக்கண்ணன். மெல்ல தேவியின் அருகே சென்று கீழே அமர்ந்தார். தாமரை போல் சிவந்த தேவியின் திருப்பாதங்களை தம் கரத்தால் மெல்ல வருடியவாறே சொன்னார்:
அடடா... கயிலையின் முரட்டுப் பாறைகளில் நடந்து நடந்து உன் பூம்பாதம் கன்னிச் சிவந்து விட்டதே... கோபத்தின் சிகரத்தில் இருந்த உமையவளுக்கு, பெருமான் தன் பாதத்தைத் தொட்ட மாத்திரத்தில் கோபம் குறைந்து போனது. என்றாலும், குரலை மாற்றாமல் சொன்னாள்:
என்ன நாடகம் இது? என்னிடத்திலுமா? போதும். எடுங்கள் கையை!
தேவி சொன்னாலும், கையை அகற்றாத பெருமான் தொடர்ந்தார்:
உன்னிடம் நாடகமா? நானா? மாயா ரூபிணியான உன்னிடம் என் நாடகம் எடுபடுமா தேவி? அதையடுத்து பளிச்சென்று எழுந்தது உமையின் வினா:
இது வேறா? நானா, இயற்பகையாரிடம் சென்று மனைவியைக் கொடு என்று கேட்டேன்?
இப்போதுதான் சினத்தின் காரணம் புரிந்தது சிவபிரானுக்கு. ஓ... இதுதான் காரணமா? மறுகணம் சுதாரித்தார்.
தேவி...இல்லை என்னாத இயற்பகை என்பதை உலகுக்கு உணர்த்த நடந்த நாடகம்தானே அது! அதற்கா கோபம்?- என்றபடியே, தேவியின் திருவடிகளை நோக்கி மெல்லக் குனிந்தார் பெருமான்.
தந்தைக்கும் தாய்க்கும் நடக்கும் உரையாடலைப் பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விநாயகன் திரும்பிப் பார்த்தான். அட! இதென்ன... தாமரைத் தண்டில் உள்ளே இருக்கும் வெள்ளைநிற நூல்கற்றை இங்கே எப்படி வந்தது? நாம் தண்ணீருக்குள் இறங்கி தாமரைப் பூ எதையும் எடுத்து வரவில்லையே! பிறகெப்படி இங்கே வந்தது?- யோசித்தான் பால விநாயகன்.
தாமரைத் தண்டை முறித்து அதன் உள்ளே இருக்கும் வெள்ளைநிற நூல்கற்றையை யானைகள் விருப்பத்தோடும் உண்ணும். சரி; இங்கே எப்படி அது விநாயகருக்குத் தெரிந்தது? உமையாளின் பாதம் நோக்கி சிவபிரான் குனிந்தார் அல்லவா? அப்போது அவர் தலையில் சூடியிருந்த பிறைசந்திரன், விநாயகருக்கு இப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தியது. மறுகணம், தன்னுடைய தும்பிக்கையை நீட்டி பிறைச்சந்திரனைப் பற்றியிழுத்தார் விநாயகர்.
அதை எதிர்பார்க்காத சிவபிரான், அந்த இழுப்பினால் ஒருகணம் தடுமாறினார். உமையவளோ, தன் நாதனிடம் பிள்ளை செய்த குறும்பைக் கண்டு குதூகலமாய் நகைத்தாள். கோபம் அகன்று அவள் சிரித்ததைப் பார்த்ததும், பரமனுக்குள்ளும் ஆனந்தம் பிரவாகித்தது. அதற்குக் காரணமான செல்ல மகனை அள்ளிக் கொஞ்சினார் அப்பா சிவபிரான். ஏன், அம்மாவும்தான்! |
|
|
|