|
நிக்க வச்சா தம்புரா... படுக்க வச்சா வீணை... நண்பரின் 12 வயது மகன் நன்றாகப் பாடக் கூடியவன். பள்ளியிலும், வெளியிலும் இசைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்று குவித்திருக்கிறான். சங்கீத உலகில் இவனுக்கு ஒளி (ஒலி) மயமான எதிர்காலம் இருப்பதாக பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.
திடீரென்று குரலில் அவனுக்குப் பிரச்னை. பாடினால் காற்று மட்டுமே வந்தது. சத்தம், சுத்தமாக வரவில்லை. காது-மூக்கு-தொண்டை நிபுணர் சோதித்து அவன் குரலை ஓரளவுக்குக் குணப்படுத்தினார். ஆனால், இரண்டு வருடங்களுக்கு அவன் பாடாமல் இருப்பது நல்லது என்று எச்சரிக்கை மணி அடித்தார். டாக்டருக்கு கர்னாடக சங்கீதம் பிடிக்காது என்பது உபரித் தகவல்!
நண்பரின் வீட்டில் இரண்டு நாட்களுக்கு இதுவே விவாதப் பொருளானது. விவாதத்தில் நான் பார்வையாளன்.
டாக்டர் சொல்லிவிட்டார். சரி.. அதுக்காக நாம அப்படியே விட்டுவிட முடியுமா? -இது நண்பரின் மனைவி.
அவனுக்குப் பதிலா நீ பாடறேங்கறியா?- திகிலுடன் கேட்டார் நண்பர்.
அப்படி இல்லீங்க... அவனுடைய இசை ஆர்வத்துக்கு நாம முட்டுக்கட்டை போடக் கூடாது...
சரி... அவனோட தொண்டைக் கட்டுக்கு நாம என்ன செய்ய முடியும்?
அவனை உடனடியா வீணை க்ளாஸ்ல சேர்த்துடலாம்...
இப்போ ஃபீல்டுல வீணைக்கு மவுஸ் இல்லியே... எந்த சபாவுலேயும் வீணைக் கச்சேரிகளுக்கு இருபது பேருக்கு மேல வர்றதில்லே...
இவன் இனிமேதான் கத்துக்கப் போறான். மேடையேறி கச்சேரி செய்ய எப்படியும் இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துக்கு மேலே ஆயிடும்... அதுக்குள்ளே வீணை பக்கம் மறுபடியும் காத்து அடிக்க ஆரம்பிச்சுடும்...
எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை... என்று நண்பர் அலட்சியமாக சொல்லிக்கொண்டிருந்தபோதே அவர் மனைவி உள்ளே சென்று ஒரு புத்தகத்தோடு வந்தாள். இதோ இதைப் படிச்சுப் பாருங்க...
நானும், நண்பரும் படித்தோம். மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே
மனதுக்கு மிகவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கும் பல விஷயங்களுக்குப் பட்டியல் கொடுக்கும் அப்பர் சுவாமிகள், துளிக்கூட தோஷமே இல்லாத வீணை கானத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார் !
|
|
|
|