|
குடியானவன் ஒருவன் இருந்தான். பண்பும் பக்தியும் மிகுந்தவன். அடிக்கடி அவனுக்கு ஒரு கனவு வரும். ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்துசெல்வான். திரும்பிப் பார்த்தால், இரண்டு ஜோடி பாதச் சுவடுகள் தெரியும். ஒரு ஜோடி தன்னுடையது, மற்றது கடவுளுடையது என உணர்ந்து, அவர் எப்போதும் தன்னுடன் துணை இருக்கிறார் என்று மகிழ்வான். சட்டென்று அவன் வாழ்வில் துயரம் சூழ்ந்தது. கனவிலும் ஒரு ஜோடி பாதச்சுவடுகளை மட்டுமே கண்டான். சே! கஷ்டமான காலத்தில் கடவுள் நம்மைவிட்டுப் போய்விட்டாரே என்று வருந்தியவன், நேராகக் கோயிலுக்குச் சென்று, அவரிடமே முறையிட்டுப் புலம்பினான். அவன் முன் கடவுள் தோன்றி, எதை வைத்து நான் உன்னோடு இல்லை என்கிற முடிவுக்கு வந்தாய்? என்று கேட்டார். கனவில் என்னைப் பின்தொடரும் உங்களின் காலடிச் சுவடுகள் இப்போது இல்லையே? என்றான் குடியானவன்.
அதைக் கேட்டுப் புன்னகைத்த கடவுள் சொன்னார்.. இப்போதும் நான் உன்னுடன்தான் இருக்கிறேன். கனவில் நீ கண்ட காலடிச் சுவடுகளில் முன்னால் இருந்தவை என்னுடைய தடங்கள். பின்னால் தொடர்ந்தவை உனது காலடிகள். அதாவது, சுகமான காலங்களில் நீ என்னைப் பின்தொடர்ந்தாய். அதனால், உனக்குத் துன்பம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலத்தில், உன்னை நான் தூக்கிச் சுமக்கிறேன். அதனால்தான் துயரங்களால் நீ அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆக, இப்போது நீ கனவில் கண்டதும் எனது பாதங்களையே! அதைக் கேட்டுக் குடியானவன் அகமகிழ்ந்தான். கடவுளுக்கு நன்றி சொன்னான். இந்தக் கதையை நான் சொல்லிமுடித்தபோது, நண்பன் கேட்டான்.. கடவுள் நம்மகூடவும் இருப்பாரா?
நிச்சயமா இருப்பார். ஆனால், அதற்கு ஏதுவாக, இழிவான விஷயங்களை நம்மிடமிருந்து அகற்றிவிடவேண்டும் என்றான். வாஸ்தவம்தான்! பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, உடல் உழைக்காமல் பிச்சை எடுக்கக்கூடாது. இந்த மூன்றும் இழிவானதுன்னு அப்பா அடிக்கடி சொல்லியிருக்கார் என்றான் நண்பன். நீ சொல்லும் இந்த மூன்றுக்கும்கூட விதிவிலக்கு உண்டு. ஆனால், விதிவிலக்கே இல்லாத இழிவு ஒன்று உண்டு என்ற நான், அதுகுறித்து நண்பனுக்கு விரிவாக விளக்கினேன். மற்றவர்களுக்கு நன்மை பயக்குமெனில், பொய்மையும் வாய்மைக்குச் சமம் என்கிறார் வள்ளுவர். இந்த இடத்தில் பொய்மைக்கு விதிவிலக்கு. அதேபோன்று களவும் கற்று மற என்ற சொல்வழக்கு உண்டு. நல்ல புத்தகம் ஒன்றை விலைக்கு வாங்கிப் படிக்கக் காசில்லை எனில், திருடியும் படிக்கலாம் என்று பெரியோர்கள் சொல்லிவைத்தார்கள் வேடிக்கையாக. ஆனால், அதையே வாடிக்கையாக்கிவிடக் கூடாது. மூன்றாவது பிச்சை எடுப்பது! ஏழ்மையைக் காரணம் காட்டி கல்வி கற்காமல் இருந்துவிடக்கூடாது; பிச்சை எடுத்தாவது கல்வி கற்கவேண்டும் என்பதை, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொல்லிவைத்தார்கள். ஆனால், இப்படி எந்த விதிவிலக்கும் இல்லாத இழிவு எது தெரியுமா? சொல்லிக்காட்டுவது! மற்றவர்களுக்கு நாம் செய்த உதவியை அடிக்கடி சொல்லிக் காட்டுவதும், மற்றவர்கள் நமக்கிழைத்த தீங்குகளை, அவர்களது குறைகளைச் சொல்லிக்காட்டுவதும்தான் இழிவிலும் இழிவானது! இப்படியான இழிவுகளை அகற்றினால், எப்போதும் கடவுள் நம்மோடு இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை! |
|
|
|