|
ஞானம் அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும்? என, சிஷ்யன் ஒருவன் தனது குருவிடம் கேட்டான்.
ஒரே ஒரு நிமிடம் போதும் என்றார் குரு.
ஒரு நிமிடமா? அதற்குள் எப்படி ஞானத்தை அடைய முடியும்? - சந்தேகத்துடன் கேட்டான் சிஷ்யன். நிச்சயமாக அடைந்துவிட முடியும்? தீர்மானமாகச் சொன்னார் குரு.
ஆனால்... குருவே! ஒரு நிமிடம் என்பது மிகமிக குறைவான நேரமாக இருக்கிறதே! சந்தேகம் தீராமல் சிஷ்யன் மென்று விழுங்கினான்.
59 விநாடிகள் அதிகமாக இருக்கிறது அப்பனே! என்றார் குரு. மற்ற சிஷ்யர்கள் எல்லோரும் இந்த உரையாடலைக் கேட்டு திகைத்தனர். சிஷ்யர்களின் மன நிலையைப் புரிந்துகொண்ட குரு கேட்டார். சரி, சந்திரனைப் பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கிறது?
உடனே பார்க்கலாமே! என்றனர் சீடர்கள். அப்படியானால் எல்லோராலும் ஏன் ஞானம் பெற முடியவில்லை? ஆன்மீக சோதனையில் இத்தனை காலம் ஏன் செலவிட வேண்டியுள்ளது? குரு கேட்க, சிஷ்யர்கள் மவுனித்தனர்.
கண்களை மூடிக்கொண்டே இருக்கும் ஒருவர் கண்ணைத் திறக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கண்ணைத் திறந்து விட்டால் கண மாத்திரத்திலேயே காட்சிகளைப் பார்க்க முடியும் இல்லையா! என்ற குருவின் விளக்கத்தை சிஷ்யர்கள் இப்போதும் புரிந்து கொண்டனர். |
|
|
|