|
ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, ராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் என்ன வேற்றுமை? என்று வினவினார். ராமாயணம் மஞ்சள் அட்டை. பாரதம் பச்சை அட்டை. ராமாயணம் நானூறு பக்கம். பாரதம் ஐந்நூறு பக்கம். ராமாயணம் பதிப்பித்தது பார்க்கர் பிரஸ். பாரதம் அனுமந்து பிரஸ். ராமாயணத்தில் சகோதரர்கள் நால்வர். பாரதத்தில் ஐவர். ராமாயணம் சொன்னவர் வால்மீகி. பாரதம் சொன்னவர் வியாசர். ராமர் பதினாலு வருஷம் வனவாசம் செய்தார். தருமர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் போனார். ராமாயணம் திரேதா யுகத்தில் நிகழ்ந்தது. பாரதம் துவாபர யுகத்தில் நிகழ்ந்தது. இப்படிப் பலரும் பலவாறு கூறினார்கள். அப்போது ஒரு சிறுமி குருநாதரைத் தொழுதாள். குருநாதா! நான் கூறலாமா? அம்மா! அறிவு எல்லாருக்கும் பொதுவுடைமைதானே? நீயும் சொல்லலாம், என்றார். அந்தப் பெண் சிறுமி, குருநாதா! ராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத்தான் வேற்றுமை என்றார். இதைக் கேட்டு எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். சிறுமியைக் கோபத்துடன் உற்றுப் பார்த்தார்கள். ஹும்... என்று உறுமினார்கள். அசடு! சும்மா இரு, உளறாதே! என்று கூறி வைத்தார்கள்.
ராமாயணம், உலகம் யாவையும் தாமுளவாக்கலும்... என்று தொடங்குகின்றது. மகாபாரதம், நீடாழி உலகத்து... என்று தொடங்குகின்றது. இவ்வாறு பல எழுத்துகள் வேற்றுமையாக இருக்கும் பொழுது ஒரே ஒரு எழுத்து வேற்றுமையென்று இந்த மக்குப் பெண் கூறினாளே! என்று எள்ளி நகையாடினார்கள்.
ஆசிரியர் அவர்களை அடக்கி, அம்மா, குழந்தாய்! ராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத்தான் வேற்றுமையென்று சொன்னாயே, அதனை இவர்கள் விளங்கிக் கொள்ளுமாறு தெளிவாகக் கூறு என்றார்.
அது என்ன எழுத்து ? அச்சிறுமி, குருநாதா! ராமாயணம் பெண்ணாசையினால் விளைந்தது. மகாபாரதம் மண்ணாசையினால் விளைந்தது. ராவணன் தன் மனைவியரை விடுத்து, ராகவன் மனைவியை விரும்பி, குலத்துடன் அழிந்தான். துரியோதனன் பாண்டவர்களின் அரசை விரும்பி 11 அக்குரோணி சேனைகளுடன் மாய்ந்தான். எனவே பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன. இதனைக் கேட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் அகமகிழ்ந்தார்கள். |
|
|
|