|
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றித் தெரியும். அவர் தந்தை ஜகவீர பாண்டியனைப் பற்றித் தெரியுமா? தென்பாண்டி நாட்டில் ராஜாஷி என்றும்; அருளாளர், அற்புதம் புரிபவர் என்றெல்லாம் போற்றப்பட்ட மாமன்னர், ஜகவீர பாண்டியன். இவ்வாறு போற்றப்படுவதற்குக் காரணம் அந்நாளில் நடந்த ஆச்சரியப்படத்தக்க சம்பவம் . காஸ்யபர் என்று ஓர் அந்தணர் இருந்தார். ஊழ்வினை காரணமாக பார்வையை இழந்து அந்தகர் ஆகி விட்டார். எனினும் தன் மன தைரியத்தைக் கைவிடவில்லை. செந்திலாண்டவன் தன் பார்வையை எப்படியும் திருப்பித் தந்து விடுவான் என்று நம்பி, திருச்செந்தூர் கோயிலேயே தங்கிவிட்டார். நாழிக்கிணறில் தினமும் நீராடி, சந்நதியிலேயே காலத்தைக் கழித்து வந்தார். திடீரென ஒரு கண்ணில் மங்கலாக பார்வை கிடைத்தது. இரு கண்களும் துலங்க செந்திலாண்டவனைக் கதறி வேண்டினார். அப்போது ஒருவர் அருள் வாக்கு கூறினார். மன்னர் ஜகவீரபாண்டியன் வருகிறார். அதனால்தான் உனக்கு இப்போது அரைப்பார்வை கிடைத்துள்ளது. அரசரின் கைப்பட்டதும் உனக்கு முழுப் பார்வையும் கிடைக்கும் என்றார். அதைக் கேட்டு காஸ்யபர் மகிழ்ந்தார். நகர எல்லையில் முரசுகள் முழங்க, பரிவாரங்களுடன் ஜகவீரபாண்டியன் கோயிலுக்குள் பிரவேசித்தார். அவரிடம் அந்த அருள்வாக்கு செய்தி கூறப்பட்டது. அவர் அதைப் பெரிதுப்படுத்தவில்லை. நான் இறைவன் முன்பு சாதாரணமானனவன். என்னிடம் பதவியும் அதிகாரமும் வேண்டுமானால் இருக்கலாம். அருளாற்றல் உள்ளவன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, தரிசனம் செய்வதில் ஆர்வமாக இருந்தார்.
அன்றிரவு திருச்செந்தூரிலேயே தங்குவதாக ஏற்பாடாகி இருந்தது. சண்முக விலாச மண்டபத்தில் வந்து அமர்ந்த அரசர், எங்கே, அந்த அந்தணரை அழைத்து வாருங்கள் பார்ப்போம் என்றார். காஸ்யபர் அழைத்துவரப்பட்டார். அவரைக் கண்ட மன்னரின் மனம் இளகியது. அவரைப் பார்த்து, நாளை காலை நீராடிவிட்டு முருகன் சன்னதிக்கு வாருங்கள். செந்திலாண்டவன் திருவருள்படி என்ன நிகழ்கிறது எனப் பார்ப்போம்? இரவு மன்னருக்கு உறக்கம் வரவவில்லை. பொழுது புலர்ந்தது. முருக தரிசனத்திற்காக சன்னதிக்குள் நுழைந்தார் மன்னர். காஸ்யபரும் அழைத்து வரப்பட்டார். பூஜை முடிந்தததும், முருகா! எல்லாம் உன் மகிமை. உன் திருவருள்படி இவரது கண்கள் ஒளிபெறாவிட்டால் நான் என் உடைவாளால் சிரம் அறுத்து, உன் திருவடிகளிலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன். இது சத்தியம்! என்று மன்னர் கூற, சுற்றிலும் குழுமி இருந்த கூட்டம் பெரும் பதற்றம் அடைந்தது.மன்னர், காஸ்யபரை அருகே அழைத்து, விபூதி தடவிவிட்டு தனது திருக்கரத்தால் கண்களை வருட, என்ன அதிசயம்! காஸ்யபரின் கண்பார்வை மலர்ந்தது. கந்தப்நெருமானை கண்ணார தரிசித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். ஜகவீர பாண்டியரின் கண்களும் பக்தி மிகுதியால் குளமாயின. மக்கள் மன்னர் ஜகவீரபாண்டியன் அருள்மிக்கவர் எனும் வாழ்த்தொழி முழக்கினர். ஆனால் அவரோ,இது முருகன் எனக்களித்த உயிர்ப்பிச்சை. இதைப் பெரிதுபடுத்தாதீர்கள். கந்தன் அருள் இதனினும் வலியது! என்று கூறிவிட்டு, பாஞ்சாலங்குறிச்சி புறப்பட்டார். முருகன் தருவருள் மகிமையே மகிமை! |
|
|
|