|
ப்ரதோஷே தீபகஸ் சந்திர: ப்ரபாதே தீபகோ ரவி: த்ரைலோகே தீபகோ தர்ம: சுபுத்ரஹ குலதீபக:
பொருள்: இரவில் ஒளி தருவது நிலவு. பகலில் விளக்கோ சூரியன். மூவுலகுக்கும் வெளிச்சம் தருவது தர்மம். பிறந்த குலத்தின் ஒளி விளக்காகத் திகழ்பவன் நல்ல மகன்.
இக்ஷ்வாகு குலத்தில் நபாகன் என்றொரு அரசன். அவனுக்கு நாபாகன் என்ற மகன் இருந்தான். அவன் சிறுவயது முதலே படிப்பில் நாட்டம் உடையவனாக இருந்தான். குரு குலத்துக்குப் படிக்கச் சென்றவன், படிப்பிலேயே முழு மனதையும் செலுத்தினான். மிகச் சிறந்த மாணாக்கனாகவும் குணவானாகவும் வளர்ந்து நாட்டுக்குத் திரும்பினான். நாபாகன் வெகு நாட்களாகியும் திரும்பி வராததால், அவனை மறந்தே விட்ட தந்தை, நாட்டை மற்ற சகோதரர்களுக்கு பிரித்துத் தந்து விட்டார். ராஜ்ஜியம் எங்களுக்குத் தரப்பட்டு விட்டது. தந்தையார்தான் எஞ்சி உள்ளார். அவரை உன் பங்காக வைத்துக் கொள் என்று கூறினார்கள் சகோதரர்கள்.
நாபாகன் மலர்ந்த முகத்துடன், தந்தை போதும் எனக்கு என்று உளமாரக் கூறினான்.
தந்தையான நபாகனோ, மகனே! மகரிஷி ஆங்கிரஸ் வெகு காலமாக ஆபூர்வ யாகத்தைச் செய்து வருகிறார். அவரைத் தவிர, வேறு யாருக்கும் அதன் மந்திரங்கள் முழுதும் தெரியாது. ஆதலால், யாகத்தை முடிக்க முடியவில்லை. நான் உனக்கு இரு மந்திரங்கள் கொடுக்கிறேன். அவைதான் உன் செல்வம். நீ ஆங்கிரஸ் முனியின் யாகத்தை முடித்துக் கொடுத்து, பொருள் ஈட்டி வா என்று அனுப்பினார். தந்தையின் ஆணையை சிரமேற்கொண்ட நாபாகன் அவ்வாறே செய்தான்.
ஆங்கிரஸ் மகரிஷி மிக்க சந்தோஷத்துடன், நாபாக! நான் இனி வைகுண்டம் செல்வேன். எஞ்சியுள்ள கணக்கற்ற தங்கக் கட்டிகள், வெள்ளி மற்றும் பொன் ஆபரணங்கள், குவியல் குவியலாக இருக்கும் நவரத்ன மணிகள், குதிரைகள், பசுக்கள் உள்ளிட்ட அனைத்தும் உனக்கே ! நீ ஒரு ராஜ்ஜியத்தை அமைத்துக்கொள் என்றார்.
நாபாகன் திரவியங்களை எடுக்க முற்பட்டான். அப்போது கரிய சரீரத்துடன் ஒருவன் அங்கே வந்தான். நான் ருத்திரன். எந்த யக்ஞத்திலும் மிஞ்சின திரவியங்கள் என்னைச் சேர்ந்தது. எல்லாவற்றையும் எனக்குக் கொடு என்றார். நாபாகனும், ஐயா ! என் பிதா சொற்படி நான் யாகத்தை முடித்துத் தந்தேன். அதற்காக மகரிஷி மனம் மகிழ்ந்து எனக்கு அளித்தது இந்தச் செல்வம். நாம், என் தந்தை அரசன் நபாகனிடம் நீதி கேட்கலாம் யாக விதிப்படி யக்ஞத்தில் மிகுந்த பொருட்களுக்கு உரியவன் ருத்திரனே ! என்றார். நாபாகன், தந்தையிடம் கோபிக்கவில்லை. என்னை மன்னிப்பீராக என்று சொல்லி ருத்ரனை வணங்கினான்.
ருத்திரன் மனம் மகிழ்ந்து, எல்லாப் பொருட்களையும் நாபாகனுக்கே கொடுத்தான். மகனே, இந்த உலகமே உன்னால் பிரகாசம் ஆயிற்று. பல்லாண்டு காலம் பெரிய பெரிய ராஜ்ஜியங்களை ஆள்வாயாக என்று சொல்லி, ஆத்ம வித்தையையும் வரமாக அளித்தார். இக்ஷ்வாகு குலத்தின் தீபமாக நாபாகன் விளங்கினார். இந்தக் குலத்தில்தான், ஸ்ரீராமரும் அவதரித்தார்.
|
|
|
|