|
அரசர் ஒருவரும் அவரது நண்பரும் பூஜை அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது எண்ணெய் இல்லாததால் விளக்கு அணைந்து இருள் பரவியது. உடனே நண்பர். பணியாளனை அழைக்கட்டுமா? எனக் கேட்டார். வேண்டாம்... அவன் உழைத்த களைப்பில் இருப்பான்! என்றார் அரசர். தானே விளக்கினை ஏற்றலாம் என நினைத்த நண்பர் எழுந்தார். விருந்தினரை வேலை வாங்குவது தவறு! என அவரைத் தடுத்த மன்னர், தானே எழுந்து தடுமாறிச் சென்று எண்ணெய் எடுத்துவந்து ஊற்றி விளக்கினை ஏற்றினார். இப்படிப்பட்ட வேலைகளை அரசரான நீங்கள் செய்யலாமா? என்று கேட்டார் நண்பர். விளக்கினை ஏற்றுவதற்கு முன்பு எப்படி அரசனாக இருந்தேனோ, அப்படித்தானே இப்போதும் இருக்கிறேன். இந்த வேலையைச் செய்ததால் எனக்கு என்ன இழுக்கு வந்து விட்டது? என்று சிரித்தபடியே அரசர் சொல்ல, மமதை இல்லாததால்தான் அவர் தலையில் மகுடம் ஏறி இருக்கிறது என்பது புரிந்தது நண்பருக்கு.
|
|
|
|