|
கபீர்தாசர் ஒருநாள் தன் மகனுடன் வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் கல் இயந்திரமான "திருகையில் கோதுமை அரைத்துக் கொண்டிருந்தாள். அதை ஆர்வத்துடன் கண்டான் மகன். அவனிடம் கபீர்,"" இதன் பெயர் திருகை. மேலும் கீழுமாக இரு வட்டக்கற்கள் இருக்கும். மேல் கல்லில் இருக்கும் ஓட்டை வழியே கோதுமையைப் போட்டால் அது கீழ் கல்லில் விழுந்து விடும். நீட்டியிருக்கும் முளைக்குச்சியைச் சுற்றினால் தானியம் அரைபடும், என்று விளக்கம் தந்தார் கபீர். அவர்கள் அவள் அருகில் வரும்போது தானியம் அரை படும் "கரபுர சப்தம் கேட்டது. அப்போது கபீரின் கண்களில் நீர் பெருகியது. கண்ணீருக்கான காரணத்தைக் கேட்டான் மகன்.""ஒன்றுமில்லையப்பா!திருகையின் கற்களுக்கு நடுவில் தானியம் அரைபடுவது போல, மனிதனும் இன்ப துன்பங்களுக்கு இடையில் சிக்கித் தவிப்பதை நினைத்துப் பார்த்தேன். கண்ணீர் வந்து விட்டது, என்றார். மகன் சிரித்தபடி, ""ஏன் அப்பா அழுகிறீர்கள்? இன்ப துன்பம் இரண்டிலும் சிக்காமல் நடுவில் இருக்கும் கட்டையை சுற்றியபடி அரைபடாமல் சில தானியங்கள் கிடப்பதைப் பாருங்கள். நாமும் மனதை நடுநிலையில் வைத்து, கடவுளை மட்டும் நம்பி வாழ்ந்தால் இன்ப துன்பம் என்ன செய்து விடும்?என்றான். மகனின் விளக்கம் கேட்ட கபீர்தாசரின் கண்ணீர் காணாமல் போனது. |
|
|
|