|
ஓவியன் ஒருவன் மிக நன்றாக தெய்வங்களைப் படமாக வரைவான். அவனுடைய மகனும் நன்றாக வரைவான். அழகான படம் ஒன்றை வரைந்த மகன், அதனைத் தன் தந்தையிடம் காட்டினான். தந்தை அதைப் பார்த்து, சுமாராக இருக்கிறது. இன்னும் நன்றாக வரைய வேண்டும் என்றார். மகன் அந்தப் படத்தைச் சற்று திருத்திவிட்டு மறுநாள் காட்டினான். தந்தையோ கண்கள் சரியாக இல்லை. இன்னும் நன்றாக வரைய வேண்டும் என்றார். மகன் தந்தை தன் ஓவியத்தைப் பாராட்ட வில்லையே என்று மனத்துக்குள் வருந்தினான். ஒருமுறை மிக அழகாக ஓர் ஓவியத்தை வரைந்துவிட்டு, அதைத் தன் தந்தையிடம் காட்டாமல் ஒளித்து வைத்தான். ஒரு மாதம் சென்ற பிறகு, அந்த ஓவியத்தை எடுத்தான். தந்தையிடம் சென்று அப்பா! இது என்னுடைய நண்பன் வரைந்த படம். எப்படி இருக்கிறது? என்று கேட்டான். மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று தந்தை கூறியவுடனே மகன் இது நான் வரைந்ததுதான் என்றான் சிரித்துக்கொண்டே. மகனே! ஓவியத்தில் நீ நன்றாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே உன் ஓவியங்களில் குறை கூறினேன். அதன் பலன் நல்ல முன்னேற்றம் அடைந்து விட்டாய் என்று தந்தை கூறியதும் மகன் பெருமிதம் அடைந்தான். |
|
|
|