|
பழமையான ரிக்வேதம் அக்னியை "ஒளி கடவுளாக போற்றுகிறது. அக்னியில் மூன்றுவிதம் உண்டு. அவை புவிஅக்னி, பரஅக்னி, நடுஅக்னி. நாம் சாதாரணமாக மூட்டுகின்ற தீ புவிஅக்னி. பரஅக்னி என்பது நம் உடலிலுள்ள வெப்பம். இதனை ஜடராக்னி என்றும் சொல்வர். இதுவே உண்ணும் உணவைச் செரிக்கச் செய்கிறது. ஜடராக்னி குறையும் போது தான் உடல் ஜில்லிட்டுப் போகிறது. வானில் உண்டாகும் மின்னல், இடிமுழக்கம் ஆகியவற்றைக் குறிப்பது நடுஅக்னி. ""தூயவனே! நீ துதிக்கத் தக்கவன். எங்களுக்கு உணவு, பலத்தை தருபவனே! துன்பத்தைப் போக்குபவனே! யாகத்துக்கு தேவர்களை வரவழைப்பவனே! ஜோதியே! உன்னை வணங்குகிறேன். சூரியனைப்போல பிரகாசிப்பவனே! மேல்நோக்கச் செல்லும் மரக்கிளை போல, உன்னுடைய ஜ்வாலைகள் மேல்நோக்கியே செல்லும். உன்னால் எங்கள் குடும்பம் செழிக்கட்டும், என்று அக்னியை வேதம் போற்றுகிறது. நெருப்பைத் தாழ்த்திப் பிடித்தாலும் மேல்நோக்கி உயர்ந்தே நிற்கும். அதுபோல, மனிதன் செல்வநிலையில் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் பண்பால் உயர்ந்தே இருக்கவேண்டும். இது நெருப்பிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்கிறார் வாரியார்.
|
|
|
|