|
நாடோடி ஒருவன் பாலைவனத்தின் வழியே பயணித்துக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு வில்லும் ஐந்து அம்புகளும் இருந்தன. வழியில் ஈச்சம் மரங்களும், ஒரு சில பாறைகளும் இருந்த இடத்தை நெருங்கினான். பொழுது சாய்ந்து விட்டது. இரவு இங்கு தங்கிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். நன்றாக இருட்டத் தொடங்கியது. நாடோடிக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. ஏதேனும் மிருகங்கள் தென்பட்டால், வேட்டையாடி பசியைப் போக்கிக் கொள்ளலாமே என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். அப்போது காட்டுக் கழுதைகள் கூட்டமாக வருவது மங்கலாகத் தெரிந்தது! நாடோடி குறி பார்த்து எய்த அம்பானது ஒரு கழுதையின் உடம்பில் தைத்து மறுபுறம் வெளியேறி, அங்கிருந்த பாறையில் பட்டு ஒலி எழுப்பியது. ஆனால், இருட்டில் எதுவும் புலப்படாததால், தனது குறி தவறிவிட்டதாகக் கருதினான். அவன் அடுத்தடுத்து முயற்சித்தபோதும் அம்புகள் ஒவ்வொன்றும் பாறையில் மோதி ஒலியெழுப்பின! அவன் ஐந்து அம்புகளும் வீணாகிவிட்டதாகக் கருதி, கோபத்தில் வில்லையும் முறித்துப்போட்டான். அந்த இரவு அவனுக்குப் பசியுடன் கழிந்தது. பொழுது விடிந்தது. கண்விழித்த நாடோடி அங்கே ஐந்து கழுதைகள் இறந்து கிடப்பதைக் கண்டான். அவன் மட்டும் கொஞ்சம் பொறுமை காத்து நிதானத்துடன் செயல்பட்டிருந்தால், வில்லை இழந்திருக்கமாட்டான்! |
|
|
|