|
துறவி ஒருவர் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு உண்மை பேசுபவர் யார் எனக் கேட்டறிந்து, அவர் வீட்டில் மதிய உணவு உண்பார். ஒரு நாள் ஓர் ஊருக்குச் சென்றவர், வழக்கம் போல் விசாரித்தார். அதோ அந்த மாடிவீட்டுக்காரர்தான் உண்மை பேசுபவர். அவருக்கு லட்சரூபாய் சொத்து உள்ளது! என்றனர். அங்கு துறவி சென்றதும், வீட்டுக்காரர் ஓடிவந்து ஞானியின் பாதங்களில் விழுந்து, சுவாமி! எங்கள் இல்லத்தில் உணவருந்த வேண்டும்! என வேண்டினார். உமக்கு எவ்வளவு செல்வம் உண்டு? என ஞானி கேட்க. இருபத்திரண்டாயிரம் ரூபாய் சுவாமி! என்றார் வீட்டுக்காரர்.
கோபம் கொண்ட ஞானி, எங்கே உமது வரவு-செலவு கணக்கை காட்டுங்கள்! என்றார். அதில் அவரது சொத்து ஒரு லட்ச ரூபாய் என்பது தெரிந்தது. ஏன் பொய் சொன்னீர்கள்? என கோபத்துடன் கேட்டார் ஞானி. சுவாமி! அது பெட்டியில் உள்ள கணக்கு. இதோ பாருங்கள், தருமக்கணக்கில் இதுவரை இருபத்திரண்டாயிரம் மட்டுமே செலவழிந்துள்ளது. அதுதானே என்னுடையது. நான் இறந்து போனால் என்னுடன் வருவது தருமம் ஒன்றுதானே! இந்தப் பெட்டியில் உள்ள பணமா என்னுடன் வரும்? ஆகவே எனக்கு சொந்தம் வெறும் இருபத்திரண்டாயிரம்தான்! என்றார். இது கேட்டு பெரிதும் மகிழ்ந்த ஞானி, அவரை வாழ்த்திவிட்டு அங்கு உணவு சாப்பிட்டார். |
|
|
|