|
எங்கள் பக்கத்து வீட்டில் தினமும் காலையில் ஒரு மணி நேரத்துக்குப் பிச்சுமணியின் குரல் ஓங்கி உயர்ந்து ஒலிக்கும். அது அவருடைய பூஜை நேரம். அதற்கான ஆயத்தங்களை, காபி குடித்த கையோடு ஆரம்பித்துவிடுவார். தோளில் துண்டு, கையில் மூங்கில் கூடையுடன் படியிறங்கிச் சென்று, தன் வீடு, பக்கத்து வீடு, எதிர்வீடு என்று ஓடி ஓடி, கண்ணில் படும் செடிகளில் இருந்தெல்லாம் பூக்கள் பறித்து நிரப்பிக்கொள்வார். பின்னர் வீடு திரும்பி, வெந்நீரில் குளித்தானதும், பிச்சுமணிக்கு வெள்ளமாய் வியர்க்கும். ரவுத்ரம் பழக ஆரம்பித்துவிடுவார். அந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களால் பாரதி சொல்படி அச்சம் தவிர்க்க இயலாது! சுவாமி படங்களுக்குப் பூக்கள் வைத்துவிட்டு, மணையில் உட்கார்ந்துகொள்வார் பிச்சுமணி. ருத்ராட்ச மாலை எடுத்து அணிந்து கொள்வார். அருகில் மொபைல் போன் இருப்பதை உறுதி செய்துகொள்வார். இங்கே இருந்த ஊதுவத்தி ஸ்டாண்டை எங்கே காணோம்? - பிச்சுமணி குரல் எழுப்பிக் கேட்பது, டீடிஎஸ் சார்ரவுண்டு சிஸ்டம்போல் வீட்டின் அத்தனைச் சுவர்களையும் அதிர வைக்கும். இதோ இருக்கே! என்று பவ்யமாக எடுத்துக் கொடுப்பாள் மனைவி. பஞ்சபாத்திரம் எங்கே? என்பார் அடுத்து. மனைவிதான் அதையும் அடையாளம் காட்டுவாள். பின், புத்தகம் திறந்து வைத்து பூஜையை ஒருவழியாக ஆரம்பிக்கும்போது, தொலைபேசி ஒலிக்கும். போன் அலறுதே.. யாராவது எடுத்துத் தொலைக்கக் கூடாதா? - அடித்தொண்டையிலிருந்து குரல் எழுப்புவார் பிச்சுமணி. அது உங்க மொபைல்தாங்க... - நினைவூட்டுவாள் சகதர்மிணி. எடுத்துப் பேசுவார். என்னது! பணம் அடுத்த வாரம்தான் கொடுப்பானா? தொலைச்சுப்புடுவேன். ரெண்டு மணிக்குள்ளே பணம் வந்தாகணும்னு அவன்கிட்ட சொல்லி வை! போன் அணையும். பூஜை தொடரும். இரண்டே நிமிடம்தான். பிச்சுமணிக்கு மறுபடியும் சாமி வந்துவிடும். டபராவுல பால் வைக்கணும்னு தினமும் உனக்குச் சொல்லணுமா? அதோ இருக்கு, பாருங்க..! கண்ல படற மாதிரி வெச்சுத்தொலைய மாட்டியா? அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை உனக்கு? பிச்சுமணி டப்பாவிலிருந்து கற்பூர வில்லைகளை எடுப்பார். பூஜை முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். அது அவரது மனைவி அப்பாடா என்று பெருமூச்சு விடும் நேரமும் கூட! ராம பக்தி மார்க்கம் என்றால் என்னவென்றே அறியாத இவர் போன்ற பிச்சுமணிகளை மனதில் கொண்டுதான், தெலியலேரு ராம பக்தி மார்கமுநு... என்று ஒரு கீர்த்தனையில் ஆதங்கப்படுகிறார் *தியாராக சுவாமிகள். |
|
|
|