|
தந்தை முக்கிய வேலையாக இருந்தார். அப்போது அவருடைய எட்டு வயது மகன் அடிக்கடி அங்கு வந்து, தந்தையிடம் பல்வேறு வினாக்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது? சூரியன் ஏன் கிழக்கே உதிக்கிறது? வானம் ஏன் நீலமாக இருக்கிறது? என்றெல்லாம் ஆராய்ச்சிக்கு உரிய கேள்விகளை அவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது, தந்தைக்குத் தொந்தரவாக இருந்தது. தன் மகனுக்கு விளையாட்டாக ஏதேனும் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டால், தனது வேலை கெடாது என்று நினைத்தார் அவர். தனது மேஜையின் மேலிருந்த <உலக வரைபடத்தை எடுத்து மகனிடம் காண்பித்து, இது என்ன? என்று கேட்டார். ஓ... தெரியுமே! இது உலகப்படம். எங்கள் ஆசிரியர் இதைக் காண்பித்திருக்கிறார் என்றார் மகன். உடனே அப்பா, மேஜையின் மீதிருந்த ஒரு கத்திரிக்கோலை எடுத்து, உலக வரைபடத்தைத் துண்டுத் துண்டாக வெட்டி, சீட்டுக் கலைப்பது போல் கலைத்தார். அதை மகனிடம் கொடுத்து, இந்த உலகப் படத்தை முதலில் இருந்தது போல் ஒரு காகிதத்தில் ஒழுங்காக ஒட்டிக்கொண்டு வா! உனக்கு ஒரு பரிசு தருகிறேன் என்று கூறினார்.
விவரம் தெரிந்த பெரியவர்களுக்கே இதைச் செய்து முடிக்கச் சில மணி நேரம் ஆகும். தன் மகனால் இதை அவ்வளவு சுலபமாக ஒட்டிவிட முடியாது! என்று தந்தை நினைத்தார். ஆனால், முற்றிலும் சரியாக ஒட்டப்பட்ட <உலகப் படத்துடன் பத்தே நிமிடத்தில் வந்து நின்றான் மகன். தந்தைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இதை இவ்வளவு சீக்கிரம் எப்படிச் செய்து முடித்தாய்? என்று கேட்டார். அப்பா, நீங்கள் கிழித்துக்கொடுத்த காகிதத்தின் மறு பக்கத்தில், ஒரு மனிதனின் படம் துண்டுத் துண்டாக இருந்தது. அந்த மனிதனின் உருவத்தை நான் சரி செய்தேன். உலகம் தானாகவே சரியாகிவிட்டது என்றான் மகன். எத்தனை பெரிய உண்மை! தனி மனிதனை சரிசெய். உலகம் சரியாகிவிடும் என்ற தத்துவத்தை இந்தச் சம்பவத்தின் மூலம் தெரிந்துகொண்டார் அந்தத் தந்தை. |
|
|
|