|
முருக பக்தரானவள்ளிநாயகம் தர்ம சிந்தனையுடன் வாழ்ந்தார். அவருக்கு ஒரு பழக்கம், தன்னிடம் உதவி கேட்பவரின் பேரையோ, ஊரையோ தெரிந்து கொள்ள விரும்பமாட்டார். இன்னும் சொல்லப்போனால், கொடுக்கும் போது தலையைக் குனிந்தபடி தான் கொடுப்பார். அள்ளித் தரும் அவரின் புகழ் ஊரெங்கும் பரவியது. இதைப் பயன்படுத்திக் கொண்டபலரும் அவரை சாமர்த்தியமாக ஏமாற்றத் தொடங்கினர். ஒருநாள் கோயிலில் அவரைக் கண்ட நண்பர் ஒருவர், அவரதுஏமாளித்தனத்தைச் சுட்டிக்காட்டினார்.அதைக் கேட்ட வள்ளிநாயகம் சிறிதும் வருந்தவில்லை. “ஏமாற்றினால் ஏமாற்றி விட்டுப் போகட்டும்.வருபவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் விரும்பவும் இல்லை.என்னிடம் இருப்பதெல்லாம் முருகப் பெருமானுடையது. வேறெந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு அவருக்கு. பொதுவாக நான்கு, ஐந்து, எட்டு கைகள் தானே தெய்வங்களுக்கு இருக்கும். ஆனால், என் அப்பன் முருகன் மட்டும் பன்னிரண்டு கைகளால் அள்ளிக் கொடுக்கிறார். வள்ளி நாயகனான முருகன் கொடுத்ததை தான் கொடுக்கிறேன். இதற்காக கொடை வள்ளல் என்றோ, ஏமாளி என்றோ பெயர் வருவது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏமாறுவதும் கூட முருகன் செயலே என்று நினைக்கிறேன்,” என்றார். ஆம்...நல்லது செய்வோரை ஏமாற்றுவது உலக இயற்கை. ஆனால், அவர்கள்ஆண்டவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. |
|
|
|