|
பண்ணையார் வீட்டு வேலைக்காரி முருகாயி,முருகபக்தி மிக்கவள். ஒருமுறை, முருகன் கோயிலில் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து வரும்படி பண்ணையார் மனைவி அனுப்பினாள். பக்தி சிரத்தையோடு கையில் பால் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் முருகாயி. அர்ச்சகரிடம் பாலைக் கொடுத்துவிட்டு, முருகனைக் கண் குளிர தரிசித்தாள். அப்போது அங்கு ஒருஅடியவர் திருப்புகழ்பாடுவது அவள் காதில் விழுந்தது. மனம் பாட்டில் ஈடுபட, அங்கேயே நின்று விட்டாள். பின் தன்னிலைக்கு திரும்பி, பரபரப்புடன் வீட்டுக்கு நடை போட்டாள். வாசலில் நின்றிருந்த பண்ணையார் மனைவிமுருகாயி வந்ததும், “போதுமாடி உனக்கு நேரம்?” என கூச்சலிட்டாள்.“அம்மா! என்னை மன்னிச்சுக்கங்க! முருகன் பாட்டுனா எனக்கு இஷ்டம்! அதனால கொஞ்சம் நேரமாயிப் போச்சு” என்றாள்.“ஏண்டி...மாட்டுக்கொட்டிலில் சாணி அள்ளுற உனக்கெல்லாம் சங்கீதம் தேவையாடி! சாணிக்கூடையில தண்ணியை நிரப்பினா நிக்கவா போகுது” என்று ஏசினாள். முருகாயியின் மனம் துடித்தது. “அம்மா! இதோ பாருங்க! சாணிக் கூடையில தண்ணியை நிரப்பினா நிக்காதுங்கிறது உண்மை தான்! அதேநேரம், ஓட்டை வழியா தண்ணி வழிஞ்சு ஓடிட்டாலும், அதில இருக்கிற அழுக்கும் சேர்ந்தும் போயிடுமே! அது மாதிரி, பாட்டு புரியலைன்னாலும், முருகன் அருளால மனசு முழுக்க சுத்தமாகுதே” என்றாள். எஜமானியால் அடுத்து பேச முடியவில்லை. |
|
|
|