|
அம்மன் கோயில் ஒன்றில் திருவிழா. ஆடு ஒன்றைபலியிடும் நோக்கில் கட்டி வைத்திருந்தனர். அங்கே ஒரு துறவி வந்தார். பலியிட ஏற்பாடுசெய்தவரை அழைத்துஉன்னைப் படைத்த கடவுளே இந்த ஆட்டையும் படைத்தார் என்பதை நீ ஒத்துக்கொள்கிறாய் அல்லவா?அவரது படைப்பை,அவருக்காகவே கொன்றால் அவருக்கு திருப்தி உண்டாகுமா? என்று கேட்டார். அந்த பக்தரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. சுவாமி! என் மனைவி மற்றும் உறவினர்களைக் கேளுங்கள். அவர் சொல்லித் தான், பாரம்பரியமாக நடக்கும் இந்த பலிக்கு ஏற்பாடு செய்தேன் என்றார் பக்தர். உடனே மகான் அவரது உறவினர்களை நோக்கி,அம்மனுக்கு ஏன் ஆட்டை பலியிட வேண்டும்? என்று கேட்டார். இது என்ன கேள்வி சுவாமி? எங்கள் முன்னோர் செய்ததை நாங்களும் கடைபிடிக்கிறோம், என்றனர். அவர்களில், ஒரு விபரமான ஆசாமி, சுவாமி! எப்படியும் இந்த ஆடு ஒருநாள் கசாப்புக்கடைக்குப் போய் சாகத்தான் போகிறது. அப்போது அதற்கு ஒரு பயனும் உண்டாகப் போவதில்லை. ஆனால், இப்போது இதை அம்மனுக்கு பலி கொடுப்பதால் மோட்சகதியை அடையும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா! என்றார்.இதைக் கேட்ட துறவி,சரியப்பா! நீயும் ஒருநாள் சாகத்தானே போகிறாய். உன் ஆத்மாவை அம்பாளுக்கு அர்ப்பணம் செய்தால் இன்னும் மகிழ்வாள் இல்லையா? என்று கேட்டார்.இதற்கு ஆசாமியால் பதில் கொடுக்க முடியவில்லை. ஆட்டை அவிழ்த்து விட்டனர். விடுதலை பெற்ற ஆடு, மகிழ்ச்சியுடன் துள்ளியபடி துறவி அருகில் வந்தது. அவரும் அதைத் தடவிக்கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.
|
|
|
|