|
ஒரு ஊர் இரண்டு பட்டுக் கிடந்தது. அம்மன் கோயில் திருவிழாவில், யாருக்கு முதல் பரிவட்டம் என்பது தான் பிரச்னை. இதனால் அடிக்கடி தகராறு வரும். ஒருமுறை, தகராறு நடந்து கொண்டிருக்க, மஞ்சள் ஆடை கட்டி மஞ்சள் முகத்துடன் ஒரு பெண் வந்தாள். ஊருக்குப் புதிது என்றாலும், அவளைப் பார்த்தவுடன் அம்மனாகவே நினைத்து கையெடுத்து வணங்க வேண்டும் போல் மக்களுக்கு தோன்றியது. பரிவட்டம் கட்டும் நேரம் வந்தது. அப்போது, அந்தப் பெண் பேச ஆரம்பித்தாள். பக்தர்களே! மரியாதை என்பது தானாக வர வேண்டும். இதோ! இந்த சிறு துணியைக் கட்டிக்கொள்வதால், உங்களுக்கு அம்மனின் அருள் கிடைக்கப் போவதில்லை. யார் ஒருவர் மானசீகமாக அம்மனை வழிபடுகிறார்களோ, அவர்களைக் கல்வி, பதவி எல்லாம் தேடி வரும். அவ்வாறு புகழடைந்தால், இதைப் போல ஆயிரம் பரிவட்டங்கள் காத்துக் கிடக்கும்.முதலில் உங்களுக்குள் ஒற்றுமை தேவை. ஊர் கூடி விழாஎடுப்பதையே அம்மன் விரும்புகிறாள். நீங்கள் விட்டுக்கொடுத்து நடந்தால், இந்த விழா களை கட்டும். ஊரே தேவலோகமாய் மாறும். இனியேனும் ஒற்றுமையாக நடந்து கொள்ளுங்கள், என்றாள். அதன்பின் அவளைக் காணவில்லை. அந்த அம்பாளே தங்களுக்கு அறிவுரை வழங்கியதாக கருதிய மக்கள், அதன்பின் ஒற்றுமையாக விழா நடத்தினர். |
|
|
|