|
மகான் ஏகநாதரிடம் பக்தர்ஒருவர், சுவாமி! மனதால் கூட யாருக்கும் பாவமே செய்யக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா? என்று கேட்டார்.ஏகநாதர் அவரிடம், என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும்! என்றார்.ஏன்.. இன்னும் ஏழுநாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது? என்றார் பக்தர்.ஏழுநாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன் என்றார் ஏகநாதர்.இதைக் கேட்ட பக்தர், சுவாமி! என்ன சொல்கிறீர்கள்? என் ஆயுள் இன்னும் ஏழுநாள் தானா? என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பக்தர்.ஆம்.. என்றார் பக்தர். பீதியடைந்த பக்தரும் நாட்களை எண்ணிக் கொண்டுஇருந்தார். ஒருவாரம் கடந்தது. இன்று தான் கடைசிநாள். ஒருமுறை மீண்டும் ஏகநாதரை தரிசித்து விட்டு வரலாம், என்று புறப்பட்டார். கண்ணீர் மல்கியபடி, சுவாமி என்று பாதத்தில் விழுந்தார்.இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவம் செய்தாய்? என்றார் ஏகநாதர். பாவமா! அதெப்படி செய்ய முடியும். கடவுளின் நினைவைத் தவிர வேறு எதுவும் எனக்கில்லையே! என்று சொல்லி அழுதார்.பார்த்தாயா! மரணம் வந்து விட்டது என்று தெரிந்ததும், உன் மனம் எப்படி மாறி விட்டதென்று! கடவுளைத் தவிர வேறு நினைப்பே இல்லாமல் போய் விட்டதல்லவா!மரணத்தைப் பற்றி சிந்திக்கும் மனம் பாவச் செயலில் ஈடுபடுவதில்லை என்பதை உணர்த்தவே இப்படிச் செய்தேன். உனக்கு ஆயுள் இன்னும் இருக்கிறது, என்று சொல்லி அணைத்துக் கொண்டார். |
|
|
|