|
மீனவன் ஒருவன் அன்று அதிகாலையில் தன் தொழிலுக்குப் புறப்பட்டான். சரியாக விடியாததால், வெளிச்சம் வரட்டும்..மீன் பிடிக்கலாம் என ஆற்றங்கரையில் காத்திருந்தான். அவன் அருகே ஒரு சிறிய மூடை கிடந்தது. அரைகுறை வெளிச்சத்தில் அதில் என்ன இருந்தது என தெரியவில்லை. ஆனால், அந்த மூடையில் கற்கள் இருந்தது மட்டும் தெரியவர, அவற்றை ஒவ்வொன்றாக ஆற்றுக்குள் வீசியெறிந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான்.சிறிது நேரத்தில் சூரியன் உதிக்க, வெளிச்சம் பரவியது. மீனவன் மீன் பிடிக்க தயாரானான். கிளம்பிய நேரத்தில் ஏதோ காலில் குத்த குனிந்து பார்த்தான். ஒரு கல் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும்அதிர்ச்சியாகி விட்டான். ஏனெனில், அது ஒரு வைரக்கல். ஐயோ! மூடையில் இருந்த வைரக்கற்களையா சாதாரணக் கற்கள் என நினைத்து தண்ணீருக்குள் வீசினேன், என புலம்பினான். தன் அதிர்ஷ்டமின்மையை நொந்து கொண்டான். அந்த மீனவனின் வாழ்வில் மட்டும் இந்தக் கதை நடக்கவில்லை! அநேக மனிதர்களின் வாழ்வில் இது நடக்கிறது.வாழ்நாள் என்பது ஒவ்வொன்றாக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. அதில் பல நல்ல சந்தர்ப்பங்கள்கதவைத் தட்டுகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதும், வீணாக்குவதும் அவரவர் கையில் தான் இருக்கிறது.
|
|
|
|