|
தன் மகன் மும்பைக்கு போய்விட்ட வருத்தத்தில் இருந்தனர் கோதை நாயகியும் அவளது கணவர் வாசுதேவனும். சம்பாதிக்கத்தான் போகிறான் என்றாலும்,பெற்றவர்களுக்கு பிள்ளையைப் பிரிந்ததில்ஏக கஷ்டம். இந்தக்காலம் போல் போன் இருந்தால், உடனுக்குடன் பேசி விடலாம். அப்போதெல்லாம் தபால் தான். கடிதங்களில், அவன் பெரிய வேலையில் இருப்பதால் கைநிறைய சம்பாதிப்பதாக எழுதுவான். இதைப்படித்து கோதைநாயகி ஆனந்தமடைவாள். மகன் அவ்வப்போது அனுப்பும் பணத்தைச் சேர்த்து வைத்தாள். அம்மா கையில் பணத்தைக் கொடுத்தால், அவள் ஆறை நுõறாக்கி விடுவாளே! இங்கு வந்த பணத்தை அவள் சிறுதொழில் செய்து பெருக்கி விட்டாள்.ஒருவழியாய் பெரும் பணம்சேர, 30 பவுனுக்கு இரண்டு செயின் வாங்கி விட்டாள். தன் மகனின் வெற்றிக்கு காரணமான உள்ளூர் கோபாலகிருஷ்ணன் கோயிலுக்கு, கிருஷ்ண ஜெயந்தியன்று வணங்குவதற்கு புறப்பட்டாள். வாங்கிய நகையை அணிந்து கொண்டாள். கூட்ட நெரிசலில் யாரோ நகைளை திருடி விட்டனர். அழுது அரற்றினாள் கோதைநாயகி. என் மகன் பட்ட பாடெல்லாம் வீணாகி விட்டதே! இதை எடுத்தவர்கள் கை வெந்து புண்ணாகட்டும்,எனசாபமிட்டாள். கவலையில் அவளுக்கு நோயே வந்து விட்டது. வாசுதேவன் மிகவும்வருந்தினார்.
நகையும் போய் மனைவியும் படுத்து விட்டாளே! கோபாலகிருஷ்ணா! அதைத்திருடியவனின் கை, கால் விளங்காமல் போகட்டும். அவன் குடும்பமே அழியட்டும். கண்ணா! நீ தான் இதற்கு நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும், என்று அரற்றினார்.ஒருமாதம் ஓடி விட்டது. அடுத்தரோகிணி நட்சத்திரத்தை ஒட்டி, வாசுதேவன் கோயிலுக்குப் போனார். அங்கே, ஒரு இளைஞன் தன் மனைவியுடன் கோபாலகிருஷ்ணர் முன்னால் நின்று, கிருஷ்ணா! நான் இனி இப்படியெல்லாம் செய்யமாட்டேன். என் மனைவி கழுத்து வீங்கி தவிக்கிறாள். எனக்கு பக்கவாதம் வந்து ஒரு கை வேலை செய்யவில்லை. நான் யாரிடம் திருடினேன் என்பது நினைவில்லை. அவர்களுக்கு சேர வேண்டியதை உனக்குதருகிறேன், என்று உண்டியலில் போடப்போனான்.இதைக் கேட்ட வாசுதேவன் ஓடிப்போய் அவனைத் தடுத்தார். தம்பி! நீ திருடியது என் மனைவியிடம் தான். அவள் இதை நினைத்தே படுத்த படுக்கையாகி விட்டாள். என் மகன் உழைப்பில் கிடைத்த பொருள் இது. இந்த கிருஷ்ணர் மீது சத்தியமா சொல்றேன். இது எங்கள் பொருள் தான். இதைஎன்னிடம் ஒப்படைப்பதே தர்மம், என்றார்.அந்த முன்னாள் திருடன் மகிழ்ந்தான்.அண்ணா! இதை உண்டியலில் மனமின்றி போடவே வந்தேன். கிருஷ்ணர் கருணை செய்து விட்டார். உங்களை நான் நம்புகிறேன். இதோ! பிடியுங்கள்! எனச் சொல்லி கொடுத்தான்.பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினார்வாசுதேவன். கோதைநாயகி அதை கண்களில் ஒற்றிக்கொண்டாள்.கிருஷ்ணா! என் மகனுக்கு இன்னும் வளத்தைக் கொடு, அவன் உனக்கு வைரக்கிரீடமே சூட்டுவான், என்று வேண்டிக்கொண்டாள்.அவள் மகனும் மேன்மேலும் உயர்ந்துகோயிலுக்கு தேவையானதைச் செய்தான். கிருஷ்ணா! இந்த கலியிலும் நீ லீலைகள் செய்கிறாயா? என்று வியந்து நின்றனர்வாசுதேவனும், கோதைநாயகியும்.
|
|
|
|