|
ஒரு சமயம் நான்கு சீடர்கள், தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களுடைய குரு அங்கே வந்தார். அவர்களுக்கு நடுவில் ஒரு பானையைக் கவிழ்த்து வைத்துவிட்டு, இதன் உள்ளே என்ன இருக்கிறது? என்று கேட்டார். முதல் சீடன், தெரியாது என்று சொன்னான். இரண்டாவது சீடனும் தெரியவில்லை என்று சொன்னான். மூன்றாமவன் பானைக்குள் கையை விட்டுத் துழாவிப் பார்த்து, ஒன்றுமில்லை என்று கூறினான். நான்காவது சீடன், பானைக்குள்ளே காற்று இருக்கிறது என்று கூறினான். குரு, அடுத்து ஒரு கேள்வி கேட்டார், பானைக்குள் இருக்கும் காற்றை வெளியே எடுக்க முடியுமா? முதல் சீடன், முடியாது என்றான். இரண்டாவது சீடன், காற்றை வெளியே எடுப்பது சாத்தியமில்லை என்று கூறினான். மூன்றாவது சீடனும், முடியவே முடியாது என்று அடித்துக் கூறினான்.
நான்காவது சீடன், தண்ணீரால் அந்தப் பானையை நிரப்பிவிட்டு, இப்போது பானைக்குள் இருந்தக் காற்றை வெளியில் எடுத்தாகிவிட்டது என்றான். முகம் மலர்ந்த குரு, அந்தச் சீடனை வெகுவாகப் பாரட்டினார். நம் மனதும் அந்தப் பானையைப் போலத்தான். அதில் தேங்கியுள்ள கெட்டவற்றை வெளியில் எடுக்க முடியாது. ஆனால் நல்லவற்றைக் கொண்டு மனதினை நிரப்ப நிரப்ப, கெட்டவை தானே வெளியேறிவிடும். நலல் மனம் வேண்டுமெனில் இப்படிச் செய்வது ஒன்றுதான் சிறந்த வழி என்றார் குரு. |
|
|
|