|
வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றவர்கள் அவரவர் வருமானத்துக்கு ஏற்ப உடைகள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு வரும் சில மாணவர்கள் அதை விட விலை உயர்ந்த ஆடை அணிந்திருப்பர். அதைப் பார்க்கும் குழந்தைகள் வீட்டுக்கு வந்து, “அவர்கள் மட்டும் ஆடம்பர உடையணிந்து வருகிறார்கள். எனக்கு நீங்கள் இப்படி ஒரு உடையை வாங்கிக் கொடுத்து, அவர்கள் முன்னால் தலை குனிய வைக்கிறீர்களே!” என்று சொல்வது வாடிக்கை. இப்படிப்பட்டவர்கள் படிக்க வேண்டிய கதை இது. சிவாஜியின் குரு ராமதாசர். இவருக்கு சிவாஜி ஒருமுறை காணிக்கையாக தங்கக்காசு, முத்து, பவளம் என வகைவகையாக அனுப்பி வைத்தார். அதைக் கொண்டு சென்றவரிடம், ராமதாசர் ஒரு துணியில் கட்டிய கைப்பிடியளவு மண், பத்து பதினைந்து கூழாங்கல், ஒரு சிறிய டின்னில் குதிரைச்சாணம் மூன்றையும் கொடுத்து விட்டார். அதைப் பெற்றுக் கொண்ட சிவாஜி அப்படியே கண்களில் ஒற்றிக்கொண்டார்.இதைப்பார்த்த, சிவாஜியின் தாய் ஜீஜிபாய்க்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. “பார்த்தாயா! சிவாஜி! நீ விலை உயர்ந்த பொருட்களை குரு காணிக்கையாக அனுப்பினாய். அவரோ, குதிரைச் சாணம், மண் இவற்றை பதிலுக்கு கொடுத்து அனுப்பியிருக்கிறாரே! இதுதான் ஒரு குரு சீடன் மீது கொண்ட அன்பா?” என்று கொதித்தார்.சிவாஜி அம்மாவைச் சமாதானம் செய்தார்.“அம்மா! நீ கோபிக்காதே. குரு எனக்கு இதையெல்லாம் கொடுத்து விட்டதன் மூலம் பெரிய பாடமே சொல்லியிருக்கார். அவர் கொடுத்து விட்ட மண், நான் பல தேசங்களை வெல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது. கூழாங்கற்கள் ஒரு பெரிய கோட்டையைக் கட்ட வேண்டுமென்று சொல்கிறது. குதிரைச்சாணம் நான் ஒரு பெரிய குதிரைப்படையை நிர்மாணம் செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது,” என்றார். மகனின் இந்த பதில் கேட்டு அம்மா ஜீஜிபாய் ஆச்சரியப்பட்டு போனார். மலிந்த பொருட்களைக் கூட, நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ‘சிறுதுரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழமொழி நம் நாட்டில் பிறந்தது கூட இதனால் தான்.இளைஞர்களே! யுவதிகளே! பெற்றவர்கள் தரும் எளிய பொருட்களைக் கூட, தங்கமாகவும், வைரமாகவும் கருதி போற்றுங்கள். எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்கும் தகுதியை நிச்சயம் பெறுவீர்கள்.
|
|
|
|