|
ஒரு பெரிய பணக்காரரின் வயலில் அறுவடை நடந்துகொண்டிருந்தது. ஏராளமானவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். வயலின் மற்றொரு பக்கம், முந்தைய நாட்களில் அறுவடை செய்த பயிரை மாடுகட்டிப் போரடித்து நெல்லைத்தனியாகவும் வைக்கோலைத் தனியாகவும் பிரித்துக் கொண்டிருந்தார்கள். வேலைக்காரர்கள் எல்லோருமே விசுவாசமானவர்கள், பரம்பரையாக அவர் நிலத்திலேயே உழைப்பவர்கள் என்பதால் பணக்காரர் அவர்களை அதிகாரம் எதுவும் செய்யாமல் அமைதியாகச் சுற்றிவந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். வயல் வரப்பில் நடந்து கொண்டிருந்த பணக்காரர். துள்ளிவந்த கன்றுக் குட்டி ஒன்றிற்கு கொஞ்சம் வைக்கோலை போரில் இருந்து உருவி எடுத்துப் போட்டுவிட்டு அதனைத் தடவிக்கொடுத்தார். கொஞ்சம் நடந்தவர், வரப்பு ஓரத்தில் தொங்கிய துõளி ஒன்றில் இருந்த குழந்தை சிணுங்க, துõளியை மெதுவாக ஆட்டிவிட்டு குழந்தையை துõங்கவைத்தார். எல்லாவற்றையும் பார்த்தபடியே அவரது நல்ல மனதை நினைத்து மகிழ்வோடு வேலை செய்து கொண்டிருந்தார்கள் எல்லோரும் நேரம் நகர்ந்து மாலைவேளை ஆயிற்று. எல்லோரும் வீட்டுக்குத் திரும்பத் தயாரானார்கள். அப்போதுதான் அவர்கள் அதை கவனித்தார்கள்.
காலையில் இருந்ததுபோல் இல்லாமல் பணக்காரரின் முகம் மிகவும் வாட்டத்துடன் இருந்தது. என்ன காரணம்? ஆளாளுக்கு முகத்தைப் பார்த்து, முகக் குறிப்புகளாலே கேள்வியை எழுப்பிக் கொண்டு எதுவும் புரியாமல் நின்றார்கள். வயதான பெரியவர் ஒருவர், பணக்காரரிடம் வாய்விட்டே கேட்டார். அய்யா ரொம்ப வாட்டமா இருக்கீங்களே. உடம்புக்கு எதுவும் செய்யுதா? இல்லை வேற ஏதாச்சம் பிரச்னையா? சொல்லுங்க, எங்க உசுரக் கொடுத்தாவது சரி செய்யறோம்..! எல்லோரையும் தீர்க்கமாகப் பார்த்த பணக்காரர், மெதுவாகச் சொன்னார், மதியானமா வரப் போரம் கொஞ்சநேரம் அசந்து துõங்கி எழுந்தேன் இல்லையா? விழிச்சு எழுந்து பார்த்தப்ப என்னோட கைக்கடிகாரத்தைக் காணலை... அது ரொம்ப விலை உயர்ந்தது. பணத்துக்காக இல்லைன்னாலும் அது என் மாமனார் வாங்கித் தந்தது. அது தொலைஞ்சது தெரிஞ்சா, என் மனைவி ரொம்ப வருத்தப்படுவா... அதான்...!
ஐயா.. அதுக்காகவா இவ்வளவு கவலைப் படுறீங்க? இங்கேதான் வரப்புல வயல்ல எங்கே யாச்சும் விழுந்திருக்கும்... இதோ ஒரு நிமிஷத்துல தேடி எடுத்துடலாம்... சொன்னவர்கள் பரபரப்பாகத் தேட ஆரம்பித்தார்கள். நேரம்தான் வேகமாகக் கரைந்ததே தவிர எவர் கண்ணிலும் கடிகாரம் படவேயில்லை. பணக்காரரோ மேலு<ம் நம்பிக்கை இழந்து சோர்ந்துபோனார். அந்த சமயத்தில் அங்கே வந்தான் ஒரு சிறுவன். வயலில் வேலை செய்யவந்திருந்த அவனது அம்மா வழக்கமான நேரம் கடந்தும் இன்னும் வீடுதிரும்பாததால், தாயைத் தேடிவந்திருந்தான் அவன். எல்லோரும் எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன். தாயிடம் விஷயம் கேட்டான். செல்வந்தரின் வாட்ச் தொலைந்துபோன விஷயத்தைச் சொன்னாள் அவள்.
அடுத்து அந்தச் சிறுவன் சொன்ன வார்த்தை எல்லோரையும் சிலைபோல நிற்கவைத்தது. எல்லாரும் அவங்கவங்க இருக்கற இடத்துலயே கொஞ்ச நேரம் ஆடாம அசையாம சத்தம் போடாம நிற்கிறீங்களா? சிறுவன் சொன்னது கம்பீரமாக எதிரொலிக்க, ஏன் என்றுகூட கேட்காமல் அமைதியானார்கள் அனைவரும். பணக்காரரை நெருங்கிய சிறுவன், ஐயா, காலைலேர்ந்து நீங்க எங்கெல்லாம் நடந்தீங்களோ, அங்கேயெல்லாம் போங்க. உங்க வாட்சை கண்டுபிடிச்சுடலாம்...! கிட்டத்தட்ட ஐம்பதுபேர் சிலமணி நேரமாகத் தேடியும் கிடைக்காதது, இந்தச் சிறுவன் தேடினால் மட்டும் கிடைத்துவிடுமா என்ன? செல்வந்தருக்கு சந்தேகம் வந்தாலும், சரி பார்ப்போமே.. என்று அப்படியே நடந்தார். குறிப்பிட்ட ஒரு இடம் வந்ததும் சட்டென்று நின்றான் அந்தச் சிறுவன். ஐயா.. உங்கள் கடிகாரம் இதோ இங்கேதான் இருக்கிறது...! சொன்னபடியே பக்கத்தில் இருந்த வைக்கோல் போரினுள் கையைவிட்டான். அதன் உள்ளேயிருந்து வாட்சை எடுத்து, பணக்காரரிடம் கொடுத்தான். சிறுவன் வாட்சைக் எவ்வாறு கண்டுபிடித்தான் என்று வியப்பாக இருக்கிறதா?
எல்லோரும் கடிகாரத்தைத் தேடியபோது அந்த இடம் சலசலவென்று சத்தமாக இருந்தது. அவர்களை அமைதியாக நிற்கச் சொல்லிவிட்டு, கூர்ந்து கவனித்தபடி தேடியபோது கடிகாரத்தின் டிக் டிக் ஓசை தெளிவாகக் கேட்டது. அதன் இருப்பிடமும் தெரிந்தது. கன்றுக் குட்டிக்காக வைக்கோல் போரினுள் கையைவிட்டு எடுத்த போது அது கழன்று சிக்கியிருந்தது. இங்கே ஒரு விஷயம் உங்களுக்கு புரிகிறதா? அமைதியாக இருந்தால்தான் எதுவுமே சுலபமாகக் கிடைக்கும்.
|
|
|
|