|
ஒருமுறை தட்சிணேஸ்வரர் கோயிலில் திருட்டுப் போய் விட்டது. சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடிச் சென்றுவிட்டார்கள். அடடா, இப்படி திருட்டு நடந்துவிட்டதே என்று பலருக்கும் வருத்தம். அதேசமயம், கடவுள் நம்பிக்கை இல்லதவர்களுக்கு, அதனால் பெரும் இளக்காரம். பக்தர்களின் மனம் நோகும்படியாக, கேலி செய்தார்கள்.
அப்படி பாதிக்கப்பட்ட பக்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்து, கடவுளால் தன்னுடைய நகைகளையே காப்பாற்றி கொள்ளமுடியவில்லையே என்றார். அதற்கு ராமகிருஷ்ணர் இந்த நகைளைச் செய்து அணிவித்தவர் யார்? என்றார் அந்த பக்தரிடம். உடனே நான்தான் என்றார் கேள்வி கேட்டவர். கடவுள் உங்களிடம் இந்த நகைகளை எல்லாம் செய்து கொடு என்று கேட்டாரா? என்றார் ராமகிருஷ்ணர்.
இல்லை நான்தான் அணிவித்தேன். கேள்வி கேட்டவரின் சுருதி குறைந்துவிட்டது. மெல்லிய குரலில் வந்தது அவர் பதில். நீ உன் இஷ்டத்துக்கு நகையைச் செய்து அணிவித்தாய். இன்னொருவன் அவன் இஷ்டத்துக்கு அதை எடுத்துச் சென்றுவிட்டான். இதற்கிடையில் ஏன் கடவுளை நிறுத்துகிறாய்? அப்படியே ஒருவன் திருடிவிட்டாலும். அவன் இந்த உலகத்தில் ஒரு மூலையில்தான் இருக்கிறான். இந்த உலகமே கடவுள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, திருடியவன் எங்கே ஓடப் போகிறான்? என்றார் ராமகிருஷ்ணர். திருட்டு நடந்ததே என்று கவலைப்பட்டவர், தனக்கு கிடைத்த உபதேசம், திருடு போன பொருளைவிட உயர்ந்தது என்றறிந்து பூரித்துப்போனார்? |
|
|
|