|
ஓர் ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்லவன். எல்லோரிடமும் அன்பு காட்டினான். எப்பொழுதும் இனிமையாகப் பேசினான். திடீரென்று ஒருநாள் அவன் இறந்து போனான். அவனை தேவதைகள் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர். மறுநாளே செல்வன் ஒருவன் சொர்க்கத்திற்குள் நுழைந்தான். அவனை வரவேற்க இசைக்கருவிகள் முழங்கின. தேவதைகள் வரிசையாக நின்றனர். அவன் கோலாகலத்துடன் சீரும் சிறப்புமாக வரவேற்கப்பட்டான். இதைப் பார்த்த அந்த ஏழை, இந்தச் செல்வன் பூமியிலும் சிறப்பாக வாழ்ந்தான். அவன் எண்ணங்கள் நிறைவேறின. இங்கும் அவனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சொர்க்கத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என்பதை அறியாமல் போனேனே என்று நினைத்தான். அப்போது அங்கிருந்த தேவதை, நீ நினைப்பது தவறு. சொர்க்கத்தில் ஏற்றத் தாழ்வு இல்லை. இங்கு எல்லோரும் சமம் தான் என்றது. நேற்று நான் வந்தேன். எனக்கு வரவேற்பு ஏதும் இல்லை. இன்று அந்த செல்வந்தனுக்கு கோலாகலமான வரவேற்பு தரப்பட்டதே, ஏன்? உன்னைப் போன்ற ஏழைகள் அடிக்கடி இங்கு வருகிறார்கள். எங்களுக்குப் பழகிப் போன இயல்பான நிகழ்ச்சி அது. அவனைப் போன்ற செல்வந்தர்கள் எப்போதாவது நுõறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வருகிறார்கள். அரிதான இந்த நிகழ்வை நாங்கள் கொண்டாடுகிறோம் என்றது தேவதை. |
|
|
|