|
கடவுள் எதையும் சரியாகச் செய்வதில்லை என்று ஒருவனுக்குத் தோன்றியது. நான் கடவுளாக இருந்தால் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்வேன். ஒவ்வொருவரின் வேண்டுதலையும் நன்றாக நிறைவேற்றுவேன் என்று தனக்குத் தானே கர்வமாகச் சொல்லிக் கொண்டான் அவன். அப்படியா? இந்தக் கணம் முதல் நீதான் கடவுள் என்று ஒரு குரல் கேட்டது. அவன் மிக மகிழ்ந்தான். கடவுளே! என் காய்கறித் தோட்டம் வாடிவிட்டது மழை பெய்தால் நல்லது என்று அவன் பக்கத்து வீட்டு விவசாயியின் குரல் கேட்டது. மழை பெய்யட்டும் என்றான் புதுக்கடவுள். உடனே மழை பெய்தது. விவசாயி மகிழ்ந்தான். ஐயோ கடவுளே, என் சட்டி பானைகளை இப்போதுதானே சூளையில் அடுக்கி நெருப்பு வைத்தேன். எல்லாம் அழிந்தனவே. உனக்குக் கண்ணே இல்லையா? என்று அழுதான் எதிர் வீட்டுக் குயவன். புதுக்கடவுளுக்குத் தெளிவு வந்தது. கடவுளே! எனக்கு இந்தப் பதவி வேண்டாம். எனக்குப் புத்தி வந்துவிட்டது என்று உரக்கக் கத்தினான் அவன். எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது. அதை முயல்பவர்கள் தோல்வி அடைவார்கள். அதற்காக யாருக்கும் உதவாமலும் இருக்கக் கூடாது. |
|
|
|