|
ஒரு நாட்டின் மகாராஜா ஒருவர் யானை மேல் அமர்ந்து நகர்வலம் வந்து கொண்டிருந்தார். நாட்டுமக்கள் அனைவரும் ராஜாவுக்கு வழிவிட்டு ஓரமாக நின்று வணங்கினார்கள். ஆனால் ஒரு துறவி மட்டும் தன் போக்கில் போய்க் கொண்டிருந்தார். இதைக் கண்ட காவலாளி ஒருவன் துறவியின் கழுத்தைப் பிடித்து ஓரமாகத் தள்ளி, ராஜா வர்றாரு தெரியலையா? என்றான். எது ராஜா? எனக் கேட்டார் துறவி. யானை மீது உட்கார்ந்து வருகிறவர்தான் என்றான். எது யானை? எனத் துறவி கேட்டார். எரிச்சலடைந்த காவலாளி, கீழே வர்றது யானை, மேலே அமர்ந்துள்ளது ராஜா என்றான். துறவி சிரித்துக் கொண்டே, எது கீழே, எது மேலே? என்று கேட்டார். காவலாளிக்கு கோபம் வந்துவிட்டது. அவன் துறவியை கீழே தள்ளி, அவர் மேல் ஏறி உட்கார்ந்து, இப்ப நான் உட்கார்ந்து உள்ளது மேலே. நீ கிடப்பது கீழே என்றான். துறவி அதைக் கேட்டும் சிரித்தபடி, நான் யார்? நீ யார்? என்று கேட்டார். காவலாளிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. துறவியின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி பணிந்தான். |
|
|
|