|
ஒரு நாட்டின் அரசனுக்குப் பிறவியிலேயே ஒரு கண் இல்லை. நீதிமானாகத் திகழ்ந்த அவன் சிறந்த புத்திசாலியும் கூட! ஒருமுறை, அவன் தன் உருவப்படத்தை வரைய, நாட்டிலேயே மிகச் சிறந்த மூன்று ஓவியர்களைப் பணித்திருந்தான். மிக மிகச் சிறப்பாக படம் வரைவோருக்குச் சிறப்பு வெகுமதி உண்டு என்றும் அறிவித்திருந்தான். ஒற்றைக் கண்ணுடன் அரசனை ஓவியமாக வரைந்தால், அவன் நிச்சயம் கோபம் கொள்வான் என்று எண்ணி, இரண்டு கண்களும் இருப்பது போன்று வரைந்தான் முதல் கலைஞன். இரண்டாவது கலைஞனோ, ஓவியம் என்பது உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால், ஒற்றைக் கண் உள்ளவனாகவே அரசனை வரைந்தான் அவன். மூன்றாவது கலைஞன் புத்திசாலி. வில்லேந்தி அம்பு எய்யும் விதமாக, மனத்தை ஒருமுகப்படுத்த ஒரு பழுதுபட்ட கண்ணை மூடிக்கொண்டிருப்பது போன்று சித்திரித்து மன்னனின் படத்தை வரைந்தான். மூன்று கலைஞர்களின் ஓவியங்களுமே சிறப்பாக இருந்தாலும், உண்மையை மென்மையாகக் கையாண்ட மூன்றாவது கலைஞனுக்கே சிறப்புப் பரிசு கிடைத்தது. உண்மையைத்தான் சொல்ல வேண்டும்; அதே நேரம், எதிராளியின் மனம் புண்படாதவாறு இதமாக அந்த உண்மையைச் சொல்ல வேண்டும் என்பது இந்தக் கதை நமக்குச் சொல்லும் நீதி! |
|
|
|