|
இளைஞன் ஒருவன் ஞானிகளைப் போல் மந்திர சக்தி பெற விரும்பி, துறவி ஒருவரைப் பார்க்கச் சென்றான். காடு மேடுகளைக் கடந்து, பல நாட்கள் பயணித்து, கடைசியில் மந்திரச் சக்திக்குப் புகழ்பெற்ற துறவியைச் சந்தித்து தன் விருப்பத்தைச் சொன்னான். புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரத்தை 108 தடவை ஜபிக்க வேண்டும் என்று உபதேசித்தார் துறவி. கூடவே ஒரு நிபந்தனையையும் விதித்தார். மந்திரம் ஜபிக்கையில் கழுதையை மட்டும் நினைக்கக் கூடாது என்பதுதான் அது! அந்த இளைஞனுக்கு ஒரே வியப்பு. நான் ஏன் மந்திரம் ஜபிக்கும்போது கழுதையைப் பற்றி நினைக்கப் போகிறேன்?! என்று வியந்தான். துறவியிடம் விடைபெற்றுத் திரும்பியதும் மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் மந்திரம் ஜபிக்கத் தொடங்கியதுமே அவனது மனத்தில் எழுந்த முதல் சிந்தனை கழுதையைப் பற்றித்தான்! சில மணி நேரம் கழித்து மீண்டும் முயன்றான்; அப்போதும் கழுதை வந்து மனத்தில் நின்றது. பின்பு, சில நாட்கள் கழித்து, மந்திரம் ஜபிக்கத் தொடங்கினான். உடனேயே அவனுக்குக் கழுதைதான் நினைவுக்கு வந்தது. அதன்பின் எப்போது மந்திரம் ஜபிக்க உட்கார்ந்தாலும், கழுதை நினைவில் குறுக்கிடுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவன் பதறியபடி மறுபடியும் ஜென் குருவிடமே சென்றான். வா மகனே! நீ வருவாய் என்று தெரியும். மனம் ஒரு குரங்கு (கழுதை?!) அதை வலுக்கட்டாயமாக ஏதேனும் ஒரு வழியில் செலுத்த முயன்றால், அதற்கு எதிர் திசையில்தான் ஓடும் ! என்றார் துறவி. மந்திரச் சக்தி பெற விரும்பினால் மட்டும் போதாது... முதலில் மனத்தைப் பழக்கி, அதன் பிறகுதான் சாதனை செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொண்டான் அந்த இளைஞன். |
|
|
|