|
சிதறு தேங்காய் உடைக்கிற வழக்கம் தமிழகத்திற்கே உரிய தனி வழிபாட்டு முறை.விநாயகர் வழிபாட்டில் மிகவும் பிரசித்தமாக இருக்கிற இந்த சிதறு தேங்காய் துண்டுகளை எடுக்கும் உரிமை யாருக்குஎன்று கேட்டால் குழந்தைகளுக்குத் தான்! இந்த உண்மையை ஒரு குழந்தை மூலமாக, தான் தெரிந்து கொண்டதாக காஞ்சிப் பெரியவர் கூறுகிறார்.1941ல் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பதற்காக, நாகப்பட்டினத்தில் நான் தங்கியிருந்தேன். அங்கே கோயிலில் தினமும் சிதறு தேங்காய் போடுவது வழக்கமாக இருந்தது. ஒருநாள் தேங்காயை கீழே போட்டு உடைக்க கூட இடம் விடாமல், ஒரே நெரிசலாக குழந்தைகள் ஒன்று கூடிவிட்டனர். திபுதிபு என்று அவர்கள் ஓடி வந்ததால், என் மீது விழுந்துவிடப் போகிறார்கள் என்ற பயத்தில், இப்படியா கூட்டம் போடுவீர்கள். விலகிப் போங்கள் என்று உடன் இருந்தவர்கள் குழந்தைகளைக் கண்டித்தார்கள். அப்போது ஒரு சிறுவன் டாண் என்று பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டு விட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்என்ன பாத்தியதை(உரிமை) இருக்கிறது? சிதறு தேங்காய் எங்கள் பாத்தியதை தான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம் என்றான். அவன் ஜோராகப் பேசியதையும், அவனது உள்ள உறுதியையும் பார்த்த போது தான் எனக்கே, அவன் சொல்வது வாஸ்தவம்(உண்மை) என்பதும், குழந்தை சுவாமியான விநாயகரின் பிரசாதத்தில் குழந்தைகளுக்குத் தான் முழுபாத்தியதை என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
|
|
|
|