|
விநாயகருக்கு துவந்த அதீத சுவாமி என்று பெயர் இருக்கிறது தெரியுமா? அவரிடம் தந்தம் அல்லவா இருக்கிறது! துவந்தம் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா!துவந்தம் என்றால் இரண்டு தந்தங்கள். இவை இரண்டு அதீத (அற்புதமான) தத்துவங்களை நமக்குச் சொல்கின்றன. இந்த இரண்டு தந்தங்களும், இரண்டு எதிர்மறையான விஷயங்களை ஒன்றாகக் காண வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன. மனிதனுக்கு இன்பமும் வருகிறது, துன்பமும் வருகிறது. இந்த இரண்டையும் ஒன்றாகப் பார் என்கிறது விநாயகரின் தந்தங்கள். இன்னும் விளக்கமாகப் பார்க்கலாம். விநாயகரின் தந்தங்களில் ஒன்று அழகாக நீளமாக ஒழுங்கான வடிவத்துடன் இருக்கிறது. அதைப் பார்க்க பார்க்க இன்பம். இன்னொன்றோ ஒடிந்திருக்கிறது. இந்த அழகான யானை முகத்தில், இப்படி ஒரு குறை இருக்கிறதே என்று மனது கஷ்டப்படுகிறது. விநாயகர் தன் முகத்தைப் பார்ப்பவர்களிடம், அன்றொரு நாள், நீ உன் துன்பத்தைச் சொல்லி முறையிடுவதற்கு என்னிடம் வந்தாய். இன்று உனக்கு நடந்த நல்ல விஷயத்தை என்னிடம் தெரிவித்து நன்றி கூற வந்துள்ளாய்.
இந்த இன்பமும், துன்பமும் வாழ்வில் மாறி மாறி வரத்தான் செய்யும். என் முகத்திலுள்ள அழகிய தந்தமும், ஒடிந்த தந்தமும் இதையே உனக்கு தெரிவிக்கின்றன, என்று சொல்லாமல் சொல்லுவார்.தந்தங்கள் இப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது என்றால், அவரது பானை வயிறு இன்னொரு அற்புதமான தத்துவத்தைச் சொல்கிறது.வயிற்றுக்குள் செல்லும் உணவு ஜீரணமாகி விடுகிறது. அதுபோல், உனக்கு ஏற்படும் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் ஜீரணிக்கும் தகுதியை நீ உருவாக்கிக் கொள் என்கிறது இந்த வயிறு.அவரது கால்களைக் கவனித்திருக்கிறீர்களா! ஒரு காலை மடக்கி, இன்னொன்றை உயர்த்தி வைத்திருப்பார். மடக்கிய கால் இவ்வுலக வாழ்க்கை, உயர்ந்திருக்கும் கால் அவ்வுலக வாழ்க்கை. இந்த உலகில் கிடைக்கும் இன்பங்கள் நிரந்தரம் என நினைக்கிறாயா? அந்தஉலகில், உனக்கு கிடைக்க இருக்கும் இன்பம் நிரந்தரம் என நினைக்கிறாயா? இவ்வுலக இன்பமோ தற்காலிகமானது, அது ஒருநாள் மடங்கிப் போகும். அவ்வுலக இன்பமோ, உயர்ந்திருக்கும் என் கால் போல, என்றும் நிலைத்திருப்பது, என்கிறார் அவர். விநாயகரின் காலடியில் அவருக்குரிய நைவேத்யங்களைப் படைக்கிறோம். நைவேத்யம் என்பது மனிதன் தேடும் செல்வம் மற்றும் சகல பாக்கியங்களையும் குறிக்கிறது. ஆனால், அவர் முன்புள்ள மூஞ்சூறு எப்படி அதைக் குனிந்து கூட பார்ப்பதில்லை. அதுபோல, நீயும் பணம்...பணம் என அலையாதே. என்னையே வணங்கு! அப்படி செய்தால், நிரந்தர செல்வமான பிறப்பற்ற நிலை கிடைத்து விடும் என்கிறார்.ஆகா...இந்த அரிய தத்துவங்களை மனதில் கொண்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோமே! |
|
|
|