|
ஒரு முதியவரும், அவரது மருமகளும் தினமும் எதாவது வாக்குவாதம் செய்து கொண்டிருப்பர். இதனால், அவரது மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது. ஒருநாள் சண்டையில், மகன் தந்தையைத் திட்டி விட்டான். பெரியவர் வருத்தத்துடன் புறப்பட்டார். வழியில் மகான் ஒருவரைக் கண்டார்.சுவாமி! முதுமையில் பிள்ளைகள் நமக்கு உதவப் போவதில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும், இளமையில் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று ஏங்குவதும், அவர்கள் மீது பாசம் வைத்து வளர்ப்பதும் தேவைதானா? என்று கேட்டார். மகான் சிரித்தபடி, சரியப்பா! நீ உன் பெற்றோர் இருந்த காலத்தில் அவர்களைக் கவனித்தாயா?சுவாமி... எனக்கு அவ்வளவா வசதி போதவில்லை. அதனால், என் தங்கை அவர்களைக் கவனித்துக் கொண்டாள், என்றார்.உடனே மகான், பிள்ளைகளுக்கு பெற்றோரே முதல் ஆசிரியர். நீ உன் பெற்றோரை கவனிக்கவில்லை. உன் பிள்ளையும் அப்படியே உன்னை நடத்துகிறான். பொருளாதாரத்தைக் காரணம் காட்டி, பெற்றவர்களை நீ புறக்கணித்ததால், இன்று நிம்மதியின்றி தவிக்கிறாய் என்று விளக்கம் அளித்தார்.ஆம்..இன்று நீங்கள் உங்கள் பெற்றோரைக் கவனித்தால் தான், நாளை நீங்கள் முதியோர் இல்லக் கதவுகளைத் தட்ட வேண்டிய அவசியமில்லாமல் போகும்.-கிரிகா |
|
|
|